

சிவகாசி: தன்னைப் பிரிந்து கணவருடன் மகன் சென்றதால் மனமுடைந்த தாயார் தனது மகளுடன் தற்கொலை செய்துகொண்டார்.
சிவகாசி அருகே உள்ள மலைப்பட்டியைச் சேர்ந்தவர் வேல்சாமி. இவரது மனைவி வனிதா ராணி (36). இவர்களது மகன் லோகேஸ்ராஜ் (16), மகள் காவியபிரியா (13).
கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டதால் சிவகாசி அருகே விஸ்வநத்தத்தில் உள்ள தனது அண்ணன் சசிக்குமார் வீட்டில் குழந்தைகள் இருவருடன் வனிதாராணி வசித்து வந்தார். வேல்சாமி, பொள்ளாச்சியில் உள்ள ஹோட்டலில் வேலை பார்த்து வருகிறார். அவ்வப்போது விஸ்வநத்தம் வந்து சென்றுள்ளார்.
குழந்தைகள் இருவரையும் வேலைக்குச் சென்று கஷ்டப்பட்டு வனிதாராணி வளர்த்து வந்தார். இந்நிலையில், 10-ம் வகுப்பு தேர்வில் லோகேஸ்ராஜ் குறைந்த மதிப்பெண் எடுத்துள்ளார். இதனால் தனியார் பள்ளியில் படித்து வந்த லோகேஸ்ராஜை அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு சேர்க்கலாம் என வனிதாராணி கூறியுள்ளார்.
ஆனால் தான் பாலிடெக்னிக் படிக்க வேண்டும் என்று லோகேஸ்ராஜ் கூறியுள் ளார். இதுபற்றி அறிந்த தந்தை வேல்சாமி, கடந்த 22-ம் தேதி விஸ்வந்தம் வந்த மகனை அழைத்துக் கொண்டு 23-ம் தேதி பொள்ளாச்சிக்குச் சென்றார்.
கடந்த இரு நாட்களுக்கு முன் வனிதாராணிக்கு மகன் லோகேஸ்ராஜ் போன் செய்து தான் தந்தையுடனே தங்குவதாகவும் இங்கு பாலிடெக்னிக் கல்லூரியில் சேர்ந்து படிக்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.
இதனால் மன வேதனையில் இருந்த வனிதாராணி நேற்று முன்தினம் இரவு தனது மகள் காவியபிரியா உடன் தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். சிவகாசி நகர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.