Published : 01 Jul 2022 07:10 AM
Last Updated : 01 Jul 2022 07:10 AM
மயிலாடுதுறை: குத்தாலம் காவல் நிலையத்துக்குட்பட்ட பல்வேறு கோயில்களிலிருந்து திருடப்பட்ட சிலைகள், பூஜை விளக்குகள், மணிகள் உள்ளிட்ட பொருட்களை தனிப்படை போலீஸார் மீட்டு, 2 பேரை கைது செய்தனர். விரைந்து செயல்பட்ட தனிப்படை போலீஸாரை எஸ்.பி என்.எஸ்.நிஷா பாராட்டினார்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கோயில்களில் சிலைகள், சிலைகளில் உள்ள நகைகள் போன்றவை அடையாளம் தெரியாத நபர்களால் தொடர்ச்சியாக திருடப்பட்டு வந்தது. இதையடுத்து, எஸ்.பி என்.எஸ்.நிஷா உத்தரவின்பேரில், டிஎஸ்பி வசந்தராஜ் மேற்பார்வையில் 6 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு, விசாரணை நடைபெற்று வந்தது.
விசாரணையில், மயிலாடுதுறை அருகேயுள்ள கடலங்குடி, தெற்கு கார்குடியைச் சேர்ந்த அண்ணாதுரை மகன் கார்த்திக் என்ற கார்த்திகேயன்(38), தஞ்சாவூர் மாவட்டம் இடையநல்லூர் காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ராமசாமி மகன் பாஸ்கர்(42) ஆகியோர், கோயில்களில் சிலைகளைத் திருடியது தெரியவந்தது.
இதையடுத்து, அவர்கள் இருவரையும் போலீஸார் கைது செய்து, அவர்களிடம் இருந்து சிவராமபுரம் காவிரிக் கரை அருகில் உள்ள பிள்ளையார் கோயிலிலிருந்து திருடப்பட்ட கருங்கல் பிள்ளையார் சிலை, 1,100 கிராம் எடையுள்ள பித்தளை பூஜை மணிகள், பித்தளை தொங்கு தூண்டா விளக்குகள், ஸ்ரீராகவேந்திரா மடத்திலிருந்து திருடப்பட்ட 8 கிலோ எடை, அரை அடி உயரம் கொண்ட வீர பிரம்ம கோவிந்தம்மாள் உலோகச் சிலை, 15 கிலோ எடை, முக்கால் அடி உயரம் கொண்ட தலை மற்றும் கைகள் துண்டிக்கப்பட்ட ராஜராஜேஸ்வரி அம்மன் சிலை, திருவாலங்காடு மஞ்சளாற்றங்கரையில் உள்ள மாரியம்மன் கோயிலிலிருந்த ஒரு அடி உயரமுடைய அய்யப்பன் பித்தளை சிலை, ஒரு கிராம் நகை, சிவராமபுரம் அக்ரஹாரத்தில் உள்ள நாராயணசாமி என்பவரின் வீட்டில் திருடப்பட்ட 17.5 கிராம் தங்க நகைகள் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து, சிலைகளையும், கைது செய்யப்பட்ட இருவரையும் குத்தாலம் காவல் நிலையத்தில் தனிப்படை போலீஸார் நேற்று ஒப்படைத்தனர். அப்போது, காவல் நிலையத்துக்கு வந்த எஸ்.பிஎன்.எஸ்.நிஷா, திருடர்களை விரைந்துப் பிடித்த போலீஸாரை பாராட்டிச் சான்றிதழ் வழங்கினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT