

நாட்றாம்பள்ளி: திருப்பத்தூர் மாவட்டம் நாட் றாம்பள்ளி வட்டம், வெலக்கல்நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் பவித்ரா. இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு சாலையில் நடந்து சென்றபோது அவ் வழியாக தலைக்கவசம் அணிந்தபடி ஒரே இரு சக்கர வாகனத்தில் வந்த 2 பேர் பவித்ரா கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பியோடினர்.
இது குறித்து நாட்றாம்பள்ளி காவல் நிலையத்தில் பவித்ரா கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சங்கிலி பறிப்பில் ஈடுபட்டு வரும் மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், நாட்றாம்பள்ளி காவல் ஆய்வாளர் சாந்தி தலைமையில், உதவி காவல் ஆய்வாளர் முனிரத்தினம் மற்றும் காவல் துறையினர் நேற்று முன்தினம் இரவு நாட்றாம்பள்ளி நகர பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அவ் வழியாக இரு சக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்தபடி வந்த 2 பேரை மடக்கி விசாரித்தபோது, வாணியம்பாடி வட்டம் ஜாப்ராபாத் பகுதியைச் சேர்ந்த இம்ரான் மகன் முகமதுபைசான் (22), முஸ்லீம்பூர் பகுதியைச் சேர்ந்த சையத்ரகுமான் மகன் நிஜாஸ்சாஹீப் (20) என்பதும், இவர்கள் தான் இரு சக்கர வாகனத்தில் சென்று பல்வேறு பெண்களிடம் தங்கச் சங்கிலி மற்றும் செல்போன் பறிப்பில் ஈடுபட்டு வந்தது என தெரியவந்தது.
இதையடுத்து, 2 பேர் மீதும் நாட்றாம்பள்ளி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்து 8 பவுன் தங்கச்சங்கிலி மற்றும் இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.