Published : 30 Jun 2022 06:34 AM
Last Updated : 30 Jun 2022 06:34 AM
சேலம்: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் கார் ஓட்டுநராக பணிபுரிந்த கனகராஜின் மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது மனைவி கொடுத்த புகாரை வாபஸ் பெறக்கோரி கொலை மிரட்டல் விடுத்த கனகராஜின் அண்ணனை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கடந்த 2017-ம் ஆண்டு நடந்த கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் போலீஸாரால் தேடப்பட்டு வந்த மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் கார் ஓட்டுநராக பணிபுரிந்த சேலம் மாவட்டம் எடப்பாடி சமுத்திரம் சித்திரை பாளையத்தைச் சேர்ந்த கனகராஜ், ஆத்தூரில் கார் விபத்தில் உயிரிழந்தார்.
அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக கனகராஜின் மனைவி கலைவாணி ஆத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் விசாரித்து கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு ஆதாரங்களை அளித்து சாட்சியை கலைத்ததாக கனகராஜின் அண்ணன் தனபாலை கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறையில் இருந்த அவர் அண்மையில் ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்நிலையில், கலைவாணி கொடுத்த புகாரை வாபஸ் பெறச் சொல்லி கனகராஜின் மற்றொரு அண்ணன் பழனிவேல் (44) கடந்த 3-ம் தேதி கலைவாணிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுதொடர்பாக கலைாவணி ஜலகண்டாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீஸார் விசாரணை நடத்தி, பழனிவேல் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை 294 (3), 195 ஏ, 354, 506 உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, நேற்று முன்தினம் இரவு பழனிவேலை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT