

கேளம்பாக்கம்: கேளம்பாக்கம் அருகே, பொதுமக்கள் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் வழக்கறிஞர் மற்றும் கல்லூரி மாணவரை போலீஸார் கைது செய்தனர்.
கேளம்பாக்கத்தை அடுத்த தையூர், குப்பம்மாள் நகரைச் சேர்ந்தவர் சங்கர் (60). பெயின்ட் அடிக்கும் தொழில் செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் காலை 9 மணியளவில் கேளம்பாக்கத்தில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் பெட்ரோல் போடுவதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வேறு சிலருடன் வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதுதொடர்பாக சங்கர் கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில், போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் புதுப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் சிவபிரசாத், தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு 11.30 அளவில் சங்கரின் வீட்டுக்குச் சென்று, போலீஸில் புகார் கொடுத்ததற்காக அவரை மிரட்டியுள்ளனர்.
அப்போது அக்கம்பக்கத்தைச் சேர்ந்த பொதுமக்கள் திரண்டனர். இதனால் அவர்களை நோக்கி கத்தியைக் காட்டி மிரட்டி, அவர்கள் மீது 2 பெட்ரோல் குண்டுகளையும் வீசினர். இதனால் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
தகவல் அறிந்த கேளம்பாக்கம் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட சிவபிரசாத் மீது தாழம்பூர் காவல் நிலையத்தில் வாகன திருட்டு வழக்கு உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.