

சேலம் / ஈரோடு: சேலம் வழியாக கேரளாவுக்கு சென்ற ரயிலில் 10 கிலோ கஞ்சா கடத்திய ஒடிசாவைச் சேர்ந்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
சேலம் ரயில்வே போலீஸார் நேற்று காலை தன்பாத் - ஆலப்புழா விரைவு ரயிலில் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ரயில் பெட்டியில் சந்தேகத்துக்கு இடமான இளைஞரின் பையை சோதனை செய்த போது அதில் 10 கிலோ எடை கொண்ட கஞ்சா பண்டல் இருந்தது தெரியவந்தது.
விசாரணையில், ஒடிசாவைச் சேர்ந்த கவுரிசங்கர் தனபதி (31) என்பதும், ஒடிசாவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து, விற்பனை செய்ய திட்டமிட்டதும் தெரியவந்தது. இதையடுத்து, கவுரிசங்கர் தனபதியை போலீஸார் கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
ஈரோட்டில் 5 பேர் கைது
ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த லட்சுமி நகர் கோண வாய்க்கால் அருகே சித்தோடு போலீஸார், வாகனச் சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேரிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் 4 கிலோ கஞ்சாவை மறைத்து எடுத்து வந்தது தெரியவந்தது.
இது தொடர்பாக சித்தோடு குமிளம்பரப்பு ராஜா (28), கொங்கம்பாளையம் முருகேசன் (34), சொட்டையம்பாளையம் வெங்கடேஷ் (44) ஆகிய மூவரைக் கைது செய்து கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர்.
இதேபோல், கோபியை அடுத்த காசிபாளையம் பகுதியில் சிங்கிரி பாளையத்தைச் சேர்ந்த திலீப்குமார் (19), மாக்கணாங் கோம்பை விஜய் (21) ஆகியோர் கஞ்சாவை விற்பனைக்கு கொண்டு சென்றது தெரியவந்தது. அவர்களை கடத்தூர் போலீஸார் கைது செய்தனர்.