Published : 29 Jun 2022 06:22 AM
Last Updated : 29 Jun 2022 06:22 AM

தந்தையை கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை: ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு

ராமநாதபுரம்: திருவாடானை அருகே தந்தையைக் கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே மூலவயல் கிராமத்தைச் சேர்ந்தவர் சோலைமலை (73). இவரது மூத்த மகன் பழனி (52). பழனிக்கு இரண்டு திருமணங்கள் நடந்து, மனைவிகள் பிரிந்து சென்ற நிலையில், தந்தை சோலை மலையுடன் வசித்து வந்தார்.

சோலைமலைக்கு சொந்தமான 42 சென்ட் நிலத்தில் 21 சென்டை விற்று, ரூ.3 லட்சத்தை பழனிக்கு கொடுத்துள்ளார். அதனையடுத்து மீதியிருந்த 21 சென்ட் நிலத்தை இறந்த இரண்டாவது மகன் நாகராஜனின் மனைவி பரமேஸ்வரிக்கு கொடுக்க சோலைமலை முயற்சித்துள்ளார்.

அப்போது பழனி அந்த நிலத்தை தம்பியின் மனைவிக்கு வழங்கக்கூடாது, தனக்குத்தான் வழங்க வேண்டும் என தந்தையிடம் தகராறு செய்துள்ளார். கடந்த 5.4.2019 அன்று அதிகாலையில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த சோலைமலையை கட்டையால் அடித்து பழனி கொலை செய்தார்.

இதுகுறித்து சோலைமலையின் அண்ணன் அரசு கொடுத்த புகாரின்பேரில், திருவாடானை போலீஸார் வழக்கு பதிவு செய்து, பழனியை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை ராமநாதபுரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் நேற்று முதன்மை மாவட்ட நீதிபதி ஜி.விஜயா, தந்தையைக் கொன்ற மகன் பழனிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10,000 அபராதமும், அபராதம் கட்டத் தவறினால் மேலும் 2 மாதங்கள் சிறை தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x