

விழுப்புரம்: கடந்த 2021-ம் ஆண்டு, அப்போதைய முதல்வரின் பாதுகாப்பு பணிக்கு சென்றிருந்த காவல்துறை சிறப்பு டிஜிபி தனக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக பெண் எஸ்.பி ஒருவர் புகார் அளித்தார்.
இதையடுத்து புகாருக்குள்ளான சிறப்பு டிஜிபி, அவருக்கு உடந்தையாக இருந்ததாக கூறப்படும் அப்போதைய செங்கல்பட்டு எஸ்பி ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டத்தோடு, சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தவும் உத்தரவிட்டப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சிபிசிஐடி போலீஸார் முன்னாள் சிறப்பு டிஜிபி, செங்கல்பட்டு முன்னாள் எஸ்பி ஆகியோர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, அவர்கள் இருவர் மீதும் விழுப்புரத்தில் உள்ள தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் ஆயிரம் பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.
இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, குற்றச்சாட்டுக்குள்ளான முன்னாள் சிறப்பு டிஜிபி மற்றும் அரசு தரப்பு சாட்சியான சென்னை சிபிசிஐடி எஸ்.பி .ஜியாவுல் ஹக் ஆகியோர் நேரில் ஆஜரானார்கள்.
அரசு தரப்பின் 2-வது சாட்சியான பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி.யின் கணவரான ஐஏஎஸ் அதிகாரியிடம் குறுக்குவிசாரணை நடத்த வேண்டும் என முன்னாள் சிறப்பு டிஜிபி தரப்பு கோரிக்கை விடுத்தது. இதையடுத்து நடுவர் புஷ்பராணி, வரும் 30-ம் தேதி பெண் எஸ்.பி.யின் கணவர் ஆஜராக உத்தரவிட்டார். மேலும், அன்று அரசு தரப்பு சாட்சிகளான காவல்துறை ஏடிஜிபி ஜெயராம், ஆய்வாளர் சீனிவாசன் ஆகியோரும் நேரில் ஆஜராக உத்தரவிட்டு விசாரணையை வரும் 30-ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.