

சென்னை: திருவல்லிக்கேணியில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் சந்தேகப்படும்படியாக 10-க்கும் மேற்பட்டோர் தங்கி இருப்பதாக திருவல்லிக்கேணி காவல் நிலைய போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து, அங்கு தங்கியிருந்த 14 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர்கள் பழைய வண்ணாரப் பேட்டையைச் சேர்ந்த சரத்குமார் (25), பரத்குமார், சாய்காந்த் (19) மற்றும் 11 பள்ளி மாணவர்கள் என்பது தெரியவந்தது. கடந்த ஆண்டு ஐஸ் அவுஸ் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டிருந்தார். அதில், தொடர்புடையவரை பழிக்குப் பழி வாங்குவதற்காக இந்த 14 பேரும் கொலை திட்டத்துடன் விடுதியில் பதுங்கி இருந்தது தெரியவந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
அவர்களிடமிருந்து 2 கிலோ கஞ்சா, 2 கத்தி, ஒரு வீச்சரிவாள், ஒரு கடப்பாரை உள்ளிட்ட ஆயுதங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் காவல் துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.