Published : 26 Jun 2022 09:00 AM
Last Updated : 26 Jun 2022 09:00 AM

சென்னை | போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.2 கோடி மதிப்பு போதைப் பொருட்கள் அழிப்பு

சென்னையின் பல்வேறு இடங்களில் கைப்பற்றப்பட்ட ரூ.2 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களை, காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ரசாயனப் பொருட்கள் எரியூட்டும் மையத்தில் தீயிலிட்டு அழித்தார்.படம்: எம்.முத்துகணேஷ்

சென்னையில் போலீஸாரால் கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களை அழிப்பதற்காக, வடக்கு மண்டல இணை ஆணையர் ஆர்.வி.ரம்யா பாரதிதலைமையில் குழு அமைக்கப்பட்டது.

அக்குழுவினர், 68 வழக்குகளில் கைப்பற்றப்பட்ட, 1,300 கிலோ கஞ்சா, 30 கிராம் ஹெராயின், பிரவுன் சுகர் உள்ளிட்ட போதைப் பொருட்களை அழிக்க நீதிமன்றம் மூலம் உத்தரவு பெற்றனர்.

இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் தென்மேல்பாக்கம் கிராமத்தில், ரூ.2 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் சென்னை மாநகர காவல்ஆணையர் சங்கர் ஜிவால் முன்னிலையில் நேற்று எரிக்கப்பட்டன.

இதுகுறித்து காவல் ஆணையர் சங்கர் ஜிவால் செய்தியாளர்களிடம் கூறும்போது, “சென்னையில் கடந்த 5 மாதங்களில் போதைப் பொருள் விற்பனை உள்ளிட்ட 404 வழக்குகள் தொடர்பாக 689 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப் பொருட்கள் விற்பனைக்குப் பயன்படுத்திய 45 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கடந்த 5 மாதங்களில் 400 பள்ளிகள்மற்றும் கல்லூரிகள், 700-க்கும்மேற்பட்ட பொது இடங்களில் போதைப்பொருட்கள் எதிர்ப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. போதைப் பொருட்கள் விற்பனையில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள். இன்னும் 2,000 கிலோ போதைப் பொருட்கள் இருப்பில் உள்ளன. முறைப்படி நீதிமன்றத்தில் அனுமதி வாங்கிய பிறகு, அவை அழிக்கப்படும்.

தமிழகத்தில் போதைப் பொருட்களை எந்த வயதினர் அதிகம் பயன்படுத்துகின்றனர், எந்த வகையான போதைப் பொருட்களைப் பயன்படுத்துகின்றனர் என்பது தொடர்பாக சுகாதாரத்துறை மற்றும் போதைப் பொருட்கள் தடுப்புப் பிரிவு இணைந்து ஆய்வு மேற்கொள்ளும். சென்னையில் போதைப் பொருட்களை விற்ற100-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x