

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி வியாசர்பாடியை சேர்ந்த விஜயகுமார் என்பவர் ரூ.14 லட்சம் பணம் பெற்று மோசடி செய்துள்ளதாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவாலிடம் வியாசர்பாடி சாஸ்திரி நகரை சேர்ந்தவர் இந்திரா ஜெனிபர் என்பவர் புகார் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக மத்திய குற்றப்பிரிவு, வேலை வாய்ப்பு மோசடி புலனாய்வு பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து காவல் ஆய்வாளர் ரெஜினா தலைமையிலான போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், விஜயகுமார், இந்திரா ஜெனிபர் மட்டுமின்றி மேலும் 31 பேரிடம், வருவாய்த் துறை, மின்சார துறை, நீதித்துறை உள்பட பல்வேறு துறைகளில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
அந்த வகையில் இதுவரை விஜயகுமார் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் பணத்தை பெற்றுக்கொண்டு, அவர்களுக்கு வேலையும், வாங்கி தராமல், பணத்தையும் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி உள்ளது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் விஜயகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.