

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் பேரளத்தை அடுத்துள்ள வேலங்குடி தென்கரை மாத்தூரைச் சேர்ந்தவர் ராணி(52). இவர் நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்தபோது, அங்கு வந்த ஒரு நபர், தன்னை, ராணியின் மகன் மணிவாசகத்தின் நண்பர் எனக் கூறி, அழைப்பிதழ் கொடுக்க வந்துள்ளதாக ராணியிடம் கூறியுள்ளார்.
பின்னர், தனது வீட்டு விசேஷத்துக்கு மாவிலை வேண்டும் என ராணியிடம் கேட்டுள்ளார். இதையடுத்து, மாவிலைப் பறிப்பதற்காக ராணி கொல்லைப்புறம் சென்றபோது, பீரோவை திறந்து அதில் இருந்த 5 பவுன் நகைகளை எடுத்துக் கொண்டு, அந்த நபர் தப்பிச் சென்றுவிட்டார்.
மாவிலைப் பறித்துக் கொண்டு வீட்டுக்குள் ராணி வந்தபோது, அந்த நபர் பீரோவில் இருந்த நகைகளை திருடிச் சென்று விட்டது தெரியவந்தது. இதுகுறித்து ராணி அளித்த புகாரின்பேரில், பேரளம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.