Last Updated : 25 Jun, 2022 12:32 AM

 

Published : 25 Jun 2022 12:32 AM
Last Updated : 25 Jun 2022 12:32 AM

விருத்தாச்சலம் அருகே ஐம்பொன் சிலைகள் மீட்பு; இருவர் கைது: மதுரை சிலைக்கடத்தல் தடுப்பு போலீஸார் நடவடிக்கை  

விருத்தாச்சலம் அருகே, மதுரை சிலைக்கடத்தல் தடுப்பு காவலர்களால் மீட்கப்பட்ட ஐம்பொன் சாமி சிலைகள்

மதுரை: விருத்தாச்சலம் அருகே ரூ. 2 கோடி மதிப்புள்ள ஐம்பொன் சிலைகளை கடத்தி விற்க முயன்ற இருவரை மதுரை சிலைகடத்தல் தடுப்பு காவல்துறையினர் கைது செய்தனர்.

கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் பகுதியில் மாரியம்மன், பெருமாள் ஆகிய ஐம்பொன்னால் ஆன இரண்டு சாமி சிலைகளை சிலர் பதுக்கி வைத்து விற்க முயற்சிப்பதாக சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவுக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறை இயக்குநர் ஜெயந்த் முரளி, ஐஜி தினகரன் ஆகியோர் உத்தரவின் பேரில், மதுரை சிலைக்கடத்தல் தடுப்பு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மலைச்சாமி தலைமையில், ஆய்வாளர் பிரேமா சாந்தகுமாரி, உதவி ஆய்வாளர்கள் கார்த்திகேயன், முருகபூபதி, பாண்டியராஜன், சிறப்பு எஸ்ஐக்கள் செல்வராஜ், சந்தனகுமார் உள்ளிட்டோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்தத் தனிப்படையினர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று சிலைகளை வைத்திருந்தவரிடம், சிலைகளை விலைக்கு வாங்குவது போல நடித்து பேரம் பேசினர். இதனைத் தொடர்ந்து விருத்தாச்சலம் அருகிலுள்ள இருப்புக்குறிச்சியைச் சேர்ந்தவர் மகிமைதாஸ் என்பவரிடம் 5 தலை நாகத்துடன் இருக்கும் அம்மன், பெருமாள் ஆகிய கடவுள்களின் சிலைகளை கைப்பற்றினர்.

தெடார்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், விருத்தாச்சலம் பெரியகோட்டிமுளையைச் சேர்ந்த பச்சமுத்து என்பவர் அந்தச் சிலைகளை கொடுத்து, விற்க சொன்னதும், அதன் மதிப்பு ரூ. 2 கோடி என்பதும் தெரிந்தது. இந்தத் தகவலின் அடிப்படையில், பச்சமுத்துவிடம் தனிப்படை போலீசார் விசாரனை நடத்தினர். அப்போது அரியலூர் முருகானந்தம் என்பவர் அந்தச் சிலைகளை விற்கச் சொன்னது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து மதுரை சரக சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் பச்சமுத்து, முருகானந்தம் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து இரண்டு சிலைகளைக் கைப்பற்றிய போலீசார் அவைகள் எந்த கோயிலில் இருந்து திருடப்பட்டது என விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x