Published : 24 Jun 2022 03:46 PM
Last Updated : 24 Jun 2022 03:46 PM

சிவன் கோயில் உண்டியலில் திருடிய பணத்தை திருப்பி வைத்த நபர் - கடிதம் மூலம் மன்னிப்பு

ராணிப்பேட்டை: லாலாபேட்டை பகுதியில் அமைந்துள்ள சிவன் கோயிலின் உண்டியலில் இருந்த பணத்தை திருடிய நபர், அதனை திருப்பிக் கொடுத்துள்ளார். அதோடு அதற்கு மன்னிப்பும் தெரிவித்துள்ளார் அவர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழகத்தின் ராணிப்பேட்டை பகுதியில் உள்ள லாலாபேட்டை அருகே உள்ள சிவன் கோயில் ஒன்றின் உண்டியலில் இருந்த பணம் திருடு போயுள்ளது. இந்நிலையில், திருடியவரே அந்தப் பணத்தை அதே உண்டியலில் போட்டு, அதற்கு மன்னிப்பும் கேட்டுள்ளதாக தெரிகிறது. இந்த விவகாரம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

சம்பந்தப்பட்ட சிவன் கோயிலின் நிர்வாகிகள் வழக்கம் போல உண்டியலில் பக்தர்கள் செலுத்திய பணத்தை எண்ணும் நோக்கில் திறந்துள்ளனர். அப்போது அதில் இருபது 500 ரூபாய் நோட்டுகள் (ரூ.10,000) அழகாக சுருட்டி வைக்கப்பட்டுள்ளதை கவனித்துள்ளனர். அதோடு அதில் ஒரு கடிதமும் இருப்பது தெரியவந்துள்ளது.

அந்தக் கடிதத்தின் விவரம்: கடந்த ஜூன் 14-ஆம் தேதி அன்று பௌர்ணமி தினத்தன்று கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. அதனால் கோயிலின் உண்டியலில் நல்ல கலெக்‌ஷஷன் இருக்கும் என்ற கணக்கில் எனது கைவரிசையைக் காட்டினேன். அதன் பிறகு எங்கள் குடும்பம் பல்வேறு சிக்கல்களை சந்தித்தது. நிம்மதி என்பதே இல்லாமல் போனது. பின்னர் தான் நான் சிவன் கோயிலில் திருடியதால் தான் இப்படி நடந்து வருகிறது என்பது எனக்கு புரிந்தது. அதனால் நிம்மதி வேண்டியும், செய்த குற்றத்தை உணர்ந்தும் நான் திருடிய பணத்தை திருப்பிக் கொடுக்கிறேன் என அதில் சொல்லப்பட்டுள்ளது.

இது தொடர்பாக போலீசார் தங்களது கருத்தை தெரிவித்துள்ளனர். உண்டியல் உடைக்கப்பட்டதை தொடர்ந்து ஊர் மக்களும், கோயில் நிர்வாகிகளும் புகார் தெரிவித்திருந்தனர். அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணையை தொடங்கியுள்ளனர். பல நாட்களாகியும் கொள்ளை தொடர்பாக துப்பு கிடைக்கவில்லை. இப்போது திருடியவரே பணத்தை உண்டியலில் செலுத்தியுள்ளார்.

“இது குற்ற உணர்ச்சி எல்லாம் கிடையாது. குற்றவாளியை போலீசார் நெருங்கி விட்டார்கள் என்பதை அவர் அறிந்திருக்கலாம். அதனால் இப்படி செய்திருக்கலாம். நிச்சயம் இந்த காரியத்தை செய்த கொள்ளையனை நாங்கள் பிடிப்போம். அவர் அதே பகுதியை சேர்ந்த நபராக கூட இருக்கலாம்” என போலீசார் தெரிவித்துள்ளதாக தகவல்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x