

கோவை: கோவையில் தனியார் மருத்துவமனையில் தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக, கூலிப்படையைச் சேர்ந்த மேலும் 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.
கோவை சத்தி சாலையில் ராமச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான மருத்துவமனை இயங்கி வந்தது. சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்தமருத்துவமனையை சென்னையைச் சேர்ந்த டாக்டர் உமாசங்கர் என்பவருக்கு குத்தகைக்கு விட்டிருந்தார். வாடகை விவகாரம் தொடர்பாக அவர்களிடையே மோதல் ஏற்பட்டது.இந்நிலையில், மருத்துவமனையில் கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தாக்குதல் சம்பவம் நடந்தது.
ரத்தினபுரி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இந்த வழக்குசமீபத்தில் கோவைமாநகர சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்றப்பட்டது. அவர்கள்விசாரணை நடத்தி, மருத்துவமனையின் உரிமையாளர் டாக்டர் ராமச்சந்திரன்(75), மருத்துவர் காமராஜ், உதவியாளர்முருகேஷ், கார்ஓட்டுநர் பழனிசாமி, கூலிப்படையைச் சேர்ந்த ரத்தினபுரி மூர்த்தி(45) ஆகியோரை கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் கைது செய்தனர்.
இவ்வழக்கில் தொடர்புடைய கூலிப்படையை சேர்ந்த ரத்தினபுரி பழனிசாமி(40), சிவானந்தா காலனியைச் சேர்ந்த ஜெய்ஹர்(40), புருஷோத்தமன்(45), காந்திபுரத்தைச் சேர்ந்த வின்சென்ட் சஞ்சய்(39), வெள்ளலூரைச் சேர்ந்த ஆட்டோ பாபு(46) ஆகியோரை போலீஸார் தேடிவந்தனர். 5 பேரையும் சிபிசிஐடி போலீஸார் நேற்று கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மேலும் சிலரை தேடி வருகின்றனர்.