

தருமபுரி: தருமபுரி மாவட்டம் அரூர் காப்புக்காட்டில் 2 புள்ளி மான்களை வேட்டையாடிய நபரை வனத்துறையினர் கைது செய்தனர்.
அரூர் வட்டம் மொரப்பூர் சந்தைமேடு பகுதியில் மொரப்பூர் வனச் சரகர் ஆனந்தகுமார் தலைமையிலான வனத்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் மூட்டையுடன் வந்த நபரை நிறுத்தி சோதனையிட்டனர்.
அதில், மூட்டைக்குள் மான் இறைச்சி இருப்பது உறுதி செய்யப்பட்டது. தொடர் விசாரணையில், அவர் அரூர் வட்டம் ஹெச்.அக்ரஹாரம் அடுத்த எட்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் என தெரியவந்தது. மேலும், அரூர் காப்புக்காட்டில் 2 புள்ளிமான்களை வேட்டையாடி அவற்றின் இறைச்சியை மூட்டையாகக் கட்டி எடுத்துச் சென்றதும் தெரிய வந்தது.
எனவே, மாவட்ட வன அலுவலர் அப்பால நாயுடு வழிகாட்டுதல்படி அவரை கைது செய்த வனத்துறையினர், அரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தினர். பின்னர் அரூர் கிளைச் சிறையில் சக்திவேல் அடைக்கப்பட்டார்.