

புதுச்சேரி: பாகூரில் மதுக்கடை அருகே ஒருவர் பாட்டிலால் அடித்து கொலை செய்யப்பட்டார். கடலூர் மாவட்டம் குறிஞ்சிபாடி பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (39).
கடந்த மூன்றரை ஆண்டுகளாக கடலூர் கம்பியம்பேட் பகுதியில் வீடு வாடகை எடுத்து குடும்பத்துடன் வசித்து வந்தார். இவர் அவ்வப்போது புதுச்சேரி சோரியாங்குப்பம் பகுதியில் உள்ள மதுக்கடைக்கு வந்து மதுக்குடித்துவிட்டு செல்வது வழக்கம்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை வீட்டிலிருந்து புறப்பட்ட செந்தில்குமார் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. சந்தேகமடைந்த உறவினர்கள் அவரது செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால் செல்போன் அணைக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து நேற்று புதுச்சேரி பாகூர் பகுதிக்கு வந்து தேடி பார்த்தனர். அப்போது குருவிநத்தம்-சோரியாங்குப்பம் சாலையில் உள்ள மதுக்கடை அருகே காலிமனையில் செந்தில்குமாரின் இருசக்கர வாகனம் நிற்பதை கண்டனர். தொடர்ந்து அவர்கள் தேடியபோது அங்குள்ள கரும்பு தோட்டத்தில் ரத்த வெள்ளத்தில் செந்தில்குமார் இறந்து கிடப்பது தெரியவந்தது.
இதுகுறித்து பாகூர் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு வந்த சீனியர் எஸ்பி தீபிகா, தெற்கு பகுதி எஸ்பி (பொறுப்பு) ரவிக்குமார், பாகூர் இன்ஸ்பெக்டர் கணேசன், சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீஸார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து பாகூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் செந்தில்குமாரின் தந்தை பைனான்ஸ் தொழில் செய்து வந்ததும், அவருக்கு செந்தில்குமார் உதவியாக இருந்ததும் தெரியவந்தது. பைனான்ஸ் தொழிலில் ஏற்பட்ட தகராறினால் அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.