

திருப்புவனம்: பூவந்தி எஸ்ஐ.யை கல்லால் தாக்கிய இளையான்குடி காவல்நிலைய போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.
மதுரை மாவட்டம் வாடிப் பட்டியைச் சேர்ந்தவர் பரமசிவம் (53). இவர் சிவகங்கை மாவட்டம் பூவந்தி காவல்நிலையத்தில் எஸ்ஐயாக பணியாற்றுகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு பூவந்தி சோதனைச்சாவடியில் பணியில் இருந்தார்.
அப்போது பூவந்தி பேருந்து நிறுத்தத்தில் கடை வைத்திருக்கும் பாஸ்கரன், தன்னிடம் முத்துப்பாண்டி என்பவர் தகராறு செய்ததாகக் கூறினார்.
இதையடுத்து பரமசிவம், காவலர் ஒருவருடன் அங்கு சென்று தகராறில் ஈடுபட்ட முத்துப்பாண்டியை கண்டித்து வீட்டுக்குச் செல்லுமாறு கூறி அனுப்பி வைத்தார்.
நேற்று அதிகாலை சோதனைச்சாவடிக்கு வந்த முத்துப்பாண்டி, பரமசிவத்திடம் தகராறு செய்து கல்லால் தாக்கினார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. பரமசிவம் மதுரை தனியார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்து பூவந்தி போலீஸார் வழக்குப் பதிந்து முத்துப்பாண்டியை கைது செய்தனர். முத்துப்பாண்டி இளையான்குடி காவல்நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத் தக்கது.