Published : 23 Jun 2022 06:42 AM
Last Updated : 23 Jun 2022 06:42 AM
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் நகராட்சி நீலாவதி நகர் அக்கரை புதுத் தெருவைச் சேர்ந்தவர் ரவி மகன் சூர்யா என்கிற ரகு(28). இவரது மனைவி காளியம்மாள்(24).
இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகன் உள்ளார். காளியம்மாளுக்கும், அவரது மாமனார் ரவி மற்றும் அவரது மனைவிகளான சுமதி, லலிதா ஆகியோருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதையடுத்து, காளியம்மாளும், அவரது கணவரும் அதே வீட்டில் மற்றொரு பகுதியில் தனியாக வசித்து வந்தனர்.
இந்தநிலையில் காளியம்மாளுக்கும், அவரது மாமனார் மற்றும் மாமியார்களுக்கும் இடையே நேற்று மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது காளியம்மாளை, அவர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தனது அண்ணன் முருகேசனிடம் தெரிவித்த காளியம்மாள், தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் கூறியதாக தெரிகிறது. அப்போது, நேரில் வந்து பேசிக் கொள்வதாக அவரிடம் முருகேசன் கூறி சமாதானப்படுத்தியுள்ளார்.
இருப்பினும், அதன்பின், காளியம்மாள் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டுள்ளார். படுகாயமடைந்த அவரை உறவினர்கள் மீட்டு, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து, கூத்தாநல்லூர் போலீஸார் ரவி, சுமதி, லலிதா ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக மன்னார்குடி கோட்டாட்சியர் தலைமையில் தனி விசாரணை நடைபெறவுள்ளது.
காளியம்மாள் இறப்புக்கு காரணமானவர்களை கைது செய்தால்தான் உடலை பெற்றுக் கொள்வோம், இல்லாவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT