

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் நகைக் கடை ஊழியரிடமிருந்து 6.2 கிலோ நகைகளை திருடிய வழக்கில் 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை கீழ்பாக்கத்தைச் சேர்ந்தவர் மணி (55). நகை மொத்த வியாபாரியான இவர் கடந்த மே 31-ம் தேதி இரவு நகைகள் கொண்ட பையுடன் தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள உணவகத்துக்குச் சென்றார்.
அங்கு பார்சல் வாங்கிவிட்டு, பணம் கொடுப்பதற்காக நகைகள் இருந்த பையை கீழே வைத்துள்ளார். பணத்தை கொடுத்துவிட்டு, நகைப்பையை பார்த்தபோது காணவில்லை.
இதுகுறித்து அவர் மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், தான் கொண்டு வந்த பையில் 6 கிலோ தங்க நகைகள், ரூ.14 லட்சம் ரொக்கம் இருந்ததாக கூறியிருந்தார்.
இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். நகைகள், பணத்தை திருடியவர்களை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
கடையில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய மகாராஷ்டிர மாநிலம் கர்மலா வட்டத்துக்கு உட்பட்ட கோட்டி கிராமத்தைச் சேர்ந்த பாண்டுரங் பாபு துகில் (45), புனேயைச் சேர்ந்த தானாஜி பாபு சுக்லி (32) ஆகியோரை தனிப்படையினர் அண்மையில் கைது செய்தனர்.
இவர்களிடமிருந்து நகைகள் கைப்பற்றப்படவில்லை என்றும், மேலும் சிலரை தேடி வருவதாகவும் காவல் துறையினர் தெரிவித்தனர்.