திருப்பத்தூர் | சிறுமிக்கு கட்டாய திருமணம்: 7 பேர் மீது போக்சோ சட்டம் பதிவு

திருப்பத்தூர் | சிறுமிக்கு கட்டாய திருமணம்: 7 பேர் மீது போக்சோ சட்டம் பதிவு
Updated on
1 min read

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே மைனர் பெண்ணை கடத்தி திருமணம் செய்த 7 பேர் மீது போக்சோ சட்டம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் திம்மனாமுத்துார் பகுதியைச் சேர்ந்தவர் மாதயன். இவரது மகன் வினோத்குமார்(32). இவர், கடந்த ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுமி வீட்டில் தனியாக இருந்த போது, அத்துமீறி உள்ளே நுழைந்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, இரு தரப்பு பெற்றோரும் பேச்சுவார்த்தை நடத்தி உறவினர்கள் முன்னிலை யில் கடந்த 2021 நவம்பர் 11-ம் தேதி சிறுமிக்கும், வினோத் குமாருக்கும் திருமணம் செய்து வைத்தனர். இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு வினோத்குமார் சிறுமியை வரதட்சணை கேட்டு அவரது தாய் வீட்டுக்கு அடித்து விரட்டியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சிறுமியின் தந்தை திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று காலை புகாரளித்தார். அதன்பேரில் காவல் துறையினர் விசாரணை நடத்திய போது, மைனர் பெண்ணுக்கு கட்டாய திருமணம் செய்து வைத்தது தெரிய வந்தது.

இதனையடுத்து, வினோத் குமார் மற்றும் அவரது தந்தை மாதயன்(57), தாய் கனக துர்கா(51), சகோதரி சிந்துஜா, மாமன் சரவணன் மற்றும் சிறுமியின் தாய், தந்தை என 7 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பாக வினோத்குமாரின் தந்தை மாதயன், தாயார் கனக துர்கா ஆகிய 2 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in