

பொள்ளாச்சி: ஆனைமலை அருகே உள்ள சிங்கா நல்லூரில் தனியார் மட்டை மில்லில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சுளிமா மாத்தே என்பவர் குடும்பத்துடன் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார்.
இவரது மகள் ரூபாலி (3). கடந்த ஜனவரி மாதம் 3-ம் தேதி ரூபாலி தேங்காய் தண்ணீர் கேட்டு அடம்பிடித்ததால், அம்பராம் பாளையத்தை சேர்ந்த மில் மேற்பார்வையாளர் சாந்து முகமது (28) ரூபாலியை உதைத்துள்ளார். இதில் ரூபாலி கீழே விழுந்து மயக்க மடைந்தார்.
மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது ரூபாலி உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ரூபாலியின் உடலில் வெளிப்புற காயங்கள் இல்லாததால் ஆனைமலை போலீஸார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில், தற்போது பிரேத பரிசோதனைக்கான ஆய்வுகூட அறிக்கையில் சிறுமியின் உடலில் உட்புறம் ஏற்பட்ட காயத்தால் இறப்பு ஏற்பட்டுள்ளது உறுதியானது.
இதையடுத்து, ஆனைமலை போலீஸார் சாந்து முகமது மீது வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்து பொள்ளாச்சி கிளை சிறையில் அடைத்தனர்.