

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டியில் மாயமான தனியார் நிறுவன ஊழியர், ராஜபாளையம் அருகே கொலை செய்யப்பட்டு, கண்மாயில் வீசப்பட்டது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக போலீஸ்காரர், பெண் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை தெப்பக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து (26). இவர், கும்மிடிப்பூண்டி சிப்காட் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார்.அவரை கடந்த மாதம் 28-ம் தேதி முதல் காணவில்லை. குடும்பத்தினர் அளித்த புகாரின்பேரில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீஸார் விசாரித்து வந்தனர்.
இதுகுறித்து போலீஸார் தரப்பில் கூறப்படுவதாவது: மாரிமுத்துவின் உறவினரான, ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் வில்வதுரை. இவர், மணிமுத்தாறு பட்டாலியன்போலீஸாக உள்ளார்.
மாரிமுத்துக்கும் வில்வதுரைக்கும் ஃபேஸ்புக் மூலம் தோழியாக அறிமுகமானவர் கோவில்பட்டியைச் சேர்ந்த ராகினி.இவரை மாரிமுத்து காதலித்து வந்துள்ளார். இதனால், மாரிமுத்துக்கும் வில்வதுரைக்கும் இடையே விரோதம் ஏற்பட்டது.
இச்சூழலில், ராகினிக்கு மாரிமுத்து ரூ.5 லட்சம் பணம் கொடுத்துள்ளார். பணத்தை திருப்பிக் கொடுக்க விரும்பாதராகினி, மாரிமுத்துவை கொலை செய்யவில்வதுரையிடம் சேர்ந்து திட்டமிட்டதாகத் தெரிகிறது. அதன்படி, மாரிமுத்துவை, கடந்த மாதம் 30-ம் தேதி திருநெல்வேலிக்கு வரவழைத்துள்ளார்.
அங்கு காத்திருந்த வில்வதுரை மற்றும் அவரது கூட்டாளிகள் அவரை காரில் கடத்திச் சென்று, கழுத்தை நெரித்து கொலை செய்து, உடலில் பெரிய கற்களை கட்டி, ராஜபாளையம் அருகே உள்ள கண்மாயில் வீசிச் சென்றுள்ளனர்.
இதையடுத்து, கடந்த 17-ம் தேதி ராஜபாளையம் அருகே உள்ள கண்மாயில் அழுகிய நிலையில், மாரிமுத்துவின் சடலத்தை போலீஸார் கண்டெடுத்தனர். தொடர்ந்து, மாரிமுத்து காணாமல் போனதாக பதிவு செய்யப்பட்ட வழக்கை, கொலை வழக்காக மாற்றம் செய்த கும்மிடிப்பூண்டி போலீஸார், இக்கொலை தொடர்பாக வில்வதுரை, அவரது கூட்டாளிகளான தூத்துக்குடியை சேர்ந்த ரவிகுமார், இசக்கிராஜா, அவரது மனைவி இளவரசி ஆகிய 4 பேரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த கொலையின் முக்கிய குற்றவாளியான ராகினியை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.