

திருவள்ளூர்: ஊத்துக்கோட்டை அருகே கோயில் பூஜையில் பங்கேற்ற மாணவியின் சந்தேக மரண வழக்கில் அவரை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்ததாக கோயில் சாமியார் முனுசாமி கைது செய்யப்பட்டார்.
ஊத்துக்கோட்டை அருகே வெள்ளாத்துக்கோட்டை ஓடை பகுதி கோயிலில் முனுசாமி என்ற சாமியார், கடந்த பிப். 13-ம் தேதி இரவு நடத்திய பூஜையில் திருவள்ளூர் அருகே உள்ள செம்பேடு கிராமத்தைச் சேர்ந்த ஹேமமாலினி (20) என்ற கல்லூரி மாணவி பங்கேற்றார். மறுநாள் காலையில் அவர் விஷமருந்தி, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்ற நிலையில், பிப்.16-ம் தேதி உயிரிழந்தார்.
பெற்றோரின் புகாரின்பேரில் பென்னலூர்பேட்டை போலீஸார், சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த விவகாரத்தில் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். பாஜக மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசனும் உரிய நடவடிக்கைக்கு வலியுறுத்தினார்.
இதையடுத்து கடந்த மார்ச் 6-ம் தேதி இந்த வழக்கு திருவள்ளூர் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. 100 நாட்களுக்கும் மேலாக விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் சாமியார் முனுசாமி நாகதோஷம் இருப்பதாகக் கூறி ஹேமமாலினியை கோயிலுக்கு அடிக்கடி வரவழைத்துள்ளார்.
பின்னர் அவரிடம் பூஜை செய்வதாகக் கூறி வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்து, அவரை தற்கொலைக்கு தூண்டியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதன் அடிப்படையில், முனுசாமி மீது வழக்கு பதிவு செய்து கைது செய்த போலீஸார், அவரை நீதிமன்ற காவலில் வைத்தனர்.