

கரூர்: கரூர் காளியப்பனூரில் போலீஸ்காரரை கத்தியால் குத்திக் கொல்ல முயன்ற வழக்கில் கூலித் தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மகளிர் விரைவு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வட்டம் நாகையகோட்டை அருகேயுள்ள சவரியார்பட்டியைச் சேர்ந்தவர் தெய்வேந்திரன் என்கின்ற பாண்டி(54), கூலித் தொழிலாளி. இவர், கடந்த 2014-ம்ஆண்டு ஆக.10-ம் தேதி மாலை கரூர்மாவட்டம் தாந்தோணிமலை அருகேயுள்ள காளியப்பனூரில் உள்ள கடை முன்பு படுத்து உறங்கியுள்ளார்.
அப்போது, அவ்வழியாகச் சென்ற கரூர் பசுபதிபாளையம் காவல் நிலையகுற்றப்பிரிவு தலைமைக் காவலரான பத்மசீலன்(52), அங்கு படுத்திருந்த தெய்வேந்திரனை எழுப்பி, அங்கு உறங்கக்கூடாது எனக் கூறியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த தெய்வேந்திரன் சேவல்சண்டைகளில் பயன்படுத்தும் கூர்மையான, சிறிய கத்தியால் பத்மசீலனின் இடுப்பில் குத்தினார்.
இதில் படுகாயமடைந்த பத்மசீலன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து பசுபதிபாளையம் போலீஸார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து தெய்வேந்திரனை கைது செய்தனர்.
மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் நீதிபதி ஏ.நசீமாபானு நேற்று தீர்ப்பளித்தார். இதில், குற்றம்சாட்டப்பட்ட தெய்வேந்திரனுக்கு ஆபாசமாக திட்டியதற்காக 3 மாதங்கள் சிறை, அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்ததற்காக 2 ஆண்டுகள் சிறை,கொலை முயற்சி குற்றத்துக்காக 10 ஆண்டுகள் சிறை, ரூ.100 அபராதம், அதைக் கட்டத்தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறை, மது போதையில் குற்றத்தில் ஈடுபட்டதற்காக 3 மாதங்கள் சிறை தண்டனை விதித்து, அவற்றை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார்.