

தூத்துக்குடி: திருச்செந்தூர் முத்தாரம்மன் கோயில் தெருவை சேர்ந்தசோமசுந்தரம் மகன் விவேகானந்தன்(48). இவர், திருச்செந்தூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார்.
கடந்த 9-ம் தேதி வீட்டை விட்டு சென்ற விவேகானந்தன் அதன் பிறகு வீடு திரும்பவில்லை. அவருடைய மனைவி மகேஸ்வரி பல இடங்களில் கணவரைத் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து மகேஸ்வரி திருச்செந்தூர் கோயில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் விவேகானந்தனை தேடும் பணியில் ஈடுபட்டனர். விசாரணையில் கடைசியாக விவேகானந்தன் திருச்செந்தூர் தெப்பக்குளம் அருகில் நடமாடியது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸார் மற்றும் தீயணைப்பு துறையினர் நேற்று காலையில் தெப்பக்குளத்தில் தேடும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து அருகேயுள்ள ஆவுடையார்குளத்தில் தேடினர். அப்போது விவேகானந்தன் உடல் அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து திருச்செந்தூர் கோயில் காவல் நிலைய போலீஸார் விசாரிக்கின்றனர்.