Published : 17 Jun 2022 03:44 PM
Last Updated : 17 Jun 2022 03:44 PM

கரூர் | காவலரை கத்தியால் குத்திய வழக்கில் கூலித்தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை

தெய்வேந்திரன்

கரூர்: காளியப்பனூரில் போலீஸாரை கத்தியால் குத்திய வழக்கில் கூலித் தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி கரூர் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்து உத்தரவிட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வட்டம் நாகையகோட்டை அருகேயுள்ள சவரியார்பட்டியைச் சேர்ந்தவர் தெய்வேந்திரன் என்ற பாண்டி (54). இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10 ஆம் தேதி மாலை தாந்தோணிமலை அருகேயுள்ள காளியப்பனூரில் உள்ள கடை முன்பு படுத்து உறங்கியுள்ளார்.

அப்போது பணி முடிந்து அவ்வழியாக சென்ற காவலர் பத்மசீலன் அங்கு படுத்திருந்த தெய்வேந்திரனை எழுப்பி இங்கு உறங்கக்கூடாது எனக் கூறியுள்ளார். இவர் பசுபதிபாளையம் காவல் நிலைய குற்றப்பிரிவு தலைமை காவலராக கடந்த 2014 ஆம் ஆண்டு பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது (52).

இதில் ஆத்திரமடைந்த தெய்வேந்திரன் சேவல் சண்டைகளில் பயன்படுத்தும் கூர்மையான, சிறிய வகை கத்தியால் காவலர் இடுப்பில் குத்தியுள்ளார். இதில் காயமடைந்த பத்மசீலனை போலீஸார் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து பசுபதிபாளையம் போலீஸார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தெய்வேந்திரனை கைது செய்தனர்.

இவ்வழக்கு கரூர் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதனிடையே, இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி நசீமாபானு இன்று வழங்கினார். அதன்படி, ஆபாசமாக திட்டியதற்காக தெய்வேந்திரனுக்கு 3 மாதங்கள் சிறைத்தண்டனை, அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்ததற்காக 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை,

கொலை முயற்சி குற்றத்திற்காக 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும், ரூ.100 அபராதமும், அபராதத்தைக் கட்டத் தவறினால் மேலும் 6 மாதம் சிறைத்தண்டனையு,, மதுபோதையில் குற்றத்தில் ஈடுபட்டதற்காக 3 மாத சிறைத்தண்டனையும் வழங்கி அவற்றை ஏக காலத்தில் அனுபவிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x