

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற 50 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.தங்கதுரை தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ராமநாதபுரம் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்பனை செய்த 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 16 கிலோ குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
6 கடைகளுக்கு தலா ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்டது. மாவட்டத்தில் இந்தாண்டு ஜனவரி முதல் ஜூன் 15 வரை கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் கடத்துபவர்கள் மீது 49 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 85 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.6.60 லட்சம் மதிப்புள்ள 66 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் 54 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன, என காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
சிவகங்கை
தேவகோட்டை, சிவகங்கையில் 2 கடைகள் ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளன. மேலும் ஒரே நாளில் 18 வழக்குகள் பதியப்பட்டு 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
இது குறித்து காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் கூறியதாவது: நடப்பாண்டில் இதுவரை மாவட்டம் முழுவதும் 23 கஞ்சா வழக்குகள், 86 குட்கா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 139 எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 17 கிலோ கஞ்சா, 1,801 கிலோ குட்கா பொருட்கள், ஒரு லாரி, 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
முப்பது பேருடைய வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. பள்ளி, கல்லுாரி வளாகங்களுக்கு அருகே, மாணவர்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் கஞ்சா, குட்கா விற்பனை செய்தால் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப் படுவர். மேலும் அவர்களது வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டு, சொத்துகள், வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றார்.