

ராஜபாளையம்: ராஜபாளையத்தில் ஊர்க்காவல் படை வீரரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்ய முயற்சித்த கும்பலை கைது செய்யக்கோரி அவரது உறவினர்கள் சாலை மறி யலில் ஈடுபட்டனர்.
ராஜபாளையம் அருகே கீழஆவாரம்பட்டியில் காளியம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது.முன்னதாக திருவிழா நடத்தக் கூடாது என ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் மற்றொரு தரப்பைச் சேர்ந்த ஊர்க்காவல் படை வீரரும், ஆட்டோ ஓட்டுநரு மான மகேந்திரன் (40) நேற்று பஞ்சு மார்க்கெட் பகுதியில் ஆட்டோவில் பொருட்களை ஏற்றிக் கொண்டிருந்தார்.
அப்போது 4 பேர் ஆட்டோவை தாக்கி சேதப்படுத்தியதுடன், மகேந்திரனை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பினர். பலத்த காயமடைந்த மகேந்திரன் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ராஜபாளையம் வடக்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர். இதனிடையே குற்றவாளிகளை கைது செய்யக் கோரி மகேந்திரனின் உறவினர்கள் ராஜபாளையம் - மதுரை நெடுஞ்சாலையில் மறியல் செய்தனர்.
அவர்களிடம் துணை வட்டாட்சியர் கோதண்டராமன், டிஎஸ்பி (பொறுப்பு) வெங்கடேசன், வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் ராஜா ஆகியோர் குற்றவாளிகளை விரைவில் கைது செய்வதாக உறுதியளித்தனர். இதையடுத்து மக்கள் சாலை மறியலை கைவிட்டனர்.