Published : 17 Jun 2022 06:20 AM
Last Updated : 17 Jun 2022 06:20 AM
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலை தடுப்பதற்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் பல்வேறு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் போலீஸார் 15 பெட்டிக் கடை மற்றும் டீக்கடைகளில் தீவிர சோதனை மேற்கொண்டு 560 கூல் லிப்ஸ் பாக்கெட்டுகள் உட்பட 930 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்துள்ளர். இது தொடர்பாக 15 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்ததாக 862 வழக்குகள் பதிவு செய்து, 896 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 5,561 கிலோ புகையிலைப் பொருட்கள் மற்றும் 18 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அதேபோல் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்டதாக 80 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 124 பேர் கைது செய்யப்பட்டு 86 கிலோ கஞ்சா மற்றும் 21 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கஞ்சா வழக்குகளில் தொடர்புடையவர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் உட்பட மொத்தம் 178 பேரின் வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளன.
போதைப் பொருள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்டவர்கள் 27 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT