

வேலூர்: வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த சேர்ப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் சுரேஷ் (41) இவர், நேற்று காலை வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.
அம்மனுவில் அவர் கூறியிருப்பதாவது, ‘‘கடந்த 10 ஆண்டுகளாக லாரி ஓட்டுநராக வேலை செய்து எனது குடும்பத்தை கவனித்து வருகிறேன். எனது குடும்பத்தில் 5 பேர் உள்ளனர். எனது வருமானத்தை நம்பிதான் குடும்பத்தினர் உள்ளனர். இந்நிலையில், ஒடுகத்தூர் பகுதியைச் சேர்ந்த சகோதரர்கள் 3 பேரிடம், குடும்ப தேவைக்காக ரூ.20,000 கடன் வாங்கியிருந்தேன்.
இதற்காக, இது வரை என்னிடம் அந்த சகோதரர்கள் ரூ.96 ஆயிரம் வட்டி வசூலித்தனர். மேலும் ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் தர வேண்டும் எனக்கேட்டு என்னை மிரட்டுகின்றனர். ரூ.20 ஆயிரம் கடன் தொகைக்காக இவ்வளவு வட்டியா? என நான் கேட்டதற்கு, என்னை நேரில் அழைத்து அடியாட்களை கொண்டு அடித்து உதைத்தனர்.
இந்த தாக்குதலில் நான் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன். ரூ 20,000 கடனுக்கு கூடுதல் வட்டி கேட்டு மிரட்டுவதில் இருந்து எனக்கும், எனது குடும்பத்தாருக்கும் காவல் துறையினர் தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும். கந்து வட்டி கேட்டு மிரட்டும் ஒடுகத்தூர் சகோதரர்கள் மீது காவல் துறையினர் உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும்’’ என மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த புகார் மனு மீது காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.