

புதுச்சேரி: புதுச்சேரி ரோடியர்பேட் அங்கு நாயக்கர் தோப்பு பகுதியை சேர்ந்த ஜீவகன் மனைவி விஜயலட்சுமி (30). இவர் புதுச்சேரி சங்கரதாஸ் வீதியில் ஒரு கட்டிடத்தின் முதல் மாடியில் அழகு நிலையத்துடன் ‘ஸ்பா’ நடத்தி வருகிறார்.
இந்நிலையில் கடந்த 6-ம் தேதி இந்த அழகு நிலையத்துக்கு வந்த 7 பேர் கும்பல் விஜயலட்சுமி மற்றும் அங்கு பணிபுரிந்து வரும் பெண் ஊழியர்களை கத்தியை காட்டி மிரட்டி ரூ.81 ஆயிரம் ரொக்க பணம், ஊழியர் அனிதா கழுத்தில் அணிந்திருந்த 4 கிராம் தங்க செயின் ஆகியவற்றை பறித்துக்கொண்டு அங்கிருந்து சென்றனர்.
இதுகுறித்து அழகு நிலைய உரிமையாளர் விஜயலட்சுமி பெரியக்கடை போலீஸில் புகார் அளித்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி னர்.
விசாரணையில் இச்செயலில் ஈடுபட்டது புதுச்சேரி ரெயின்போ நகரை சேர்ந்த சத்யா (எ) சிவ பெருமாள், லாஸ்பேட்டையை சேர்ந்த கிருஷ்ணகுமார், முத்தியால் பேட்டை டிவி நகர் விஸ்வா, விக்கி (எ) விக்னேஷ், எலி (எ) எலி விஜய், நாவற்குளத்தை சேர்ந்த வெற்றி மற்றும் கவுண்டன்பாளையத்தை சேர்ந்த பாலா என்பது தெரிய வந்தது.
இதையடுத்து கிருஷ்ணகுமார், பாலா, விஷ்வா, விஜய்(எ)எலி விஜய் ஆகிய 4 பேரை கடந்த வாரம் போலீஸார் கைது செய்தனர். இவ்வழக்கில் முக்கிய நபரான விக்கி(எ)விக்னேஷ் என்பவரை நேற்று கைது செய்தனர். மற்ற இருவரை தேடி வருகின்றனர்.