

வேலூர்: வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி உடல் நலக்குறைவால் நேற்று உயிரிழந்தார்.
வேலூர் தொரப்பாடியில் உள்ள மத்திய ஆண்கள் சிறையில் விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் என 700-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் கீழமங்கலம் பகுதியைச்சேர்ந்த தசராஜ் (96) என்பவர், கொலை வழக்கு ஒன்றில் ஆயுள் தண்டனை பெற்று கடந்த 20 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு ஆஸ்துமா மற்றும் இருதய பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் இருந்தாக கூறப்படுகிறது. இந்நிலையில், வேலூர் மத்திய சிறையில் தசராஜ் நேற்று திடீரென மயங்கி விழுந்தார். சிறைத்துறை அதிகாரிகள் அவரை உடனடியாக மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அவரை பரிசோதனை செய்த அரசு மருத்துவர்கள், தசராஜ் மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து, அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இது குறித்து சிறை அதிகாரிகள், பாகாயம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.