திருச்சி | செல்போன் செயலி மூலம் கடன் வாங்கியவரின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து பணம் கேட்டு மிரட்டல்: போலீஸார் விசாரணை

திருச்சி | செல்போன் செயலி மூலம் கடன் வாங்கியவரின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து பணம் கேட்டு மிரட்டல்: போலீஸார் விசாரணை
Updated on
1 min read

திருச்சி: செல்போன் செயலி மூலம் கடன் வாங்கியவரின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து, சமூக வலைதளங்களில் வெளியிடாமல் இருக்க வேண்டுமெனில் பணம் தர வேண்டுமென மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகேயுள்ள மணக்கால் கிராமத்தைச் சேர்ந்தவர்அன்பு மகன் ராஜசேகர் (24). லால்குடியில் துரித உணவகம் நடத்தி வரும் இவர், உடனடிகடன் வழங்கும் செல்போன் செயலியில் ரூ.50,000 கடன் கேட்டு விண்ணப்பித்துள்ளார்.

அப்போது அதற்கான விண்ணப்பத்துடன் தனது வங்கிக் கணக்கு, பான் கார்டு, ஆதார் கார்டு, டிரைவிங் சைலன்ஸ் ஆகியவற்றையும் பதிவேற்றம் செய்துள்ளார். அதன்பின் செல்போனில் தொடர்பு கொண்ட ஒருவர், ரூ.3,000 மட்டுமே கடன் வழங்க முடியும் எனக்கூறியுள்ளார்.

இதை விரும்பாத ராஜசேகர்தனது கடன் விண்ணப்பத்தை நிராகரிக்குமாறு கூறியுள்ளார். ஆனால் அதை ஏற்றுக்கொள்ளாமல் அவரது வங்கிக் கணக்கில் ரூ.1,860 அனுப்பியுள்ளனர். மேலும் அந்த தொகைக்கு கூடுதல் வட்டி கேட்டு ரூ.4,110-ஐ ராஜசேகரிடமிருந்து பெற்றுள்ளனர்.

இந்த சூழலில் அடையாள அட்டையில் இருந்த ராஜசேகரின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து, அதை 9 செல்போன் எண்களில் இருந்து ராஜசேகரின் செல்போன் எண்ணுக்கு அனுப்பி வைத்து, தங்களுக்கு மேலும் பணம் கொடுக்க வேண்டும் எனமிரட்டியுள்ளனர்.

அனுப்பாவிட்டால் ஆபாச மாக சித்தரிக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாகவும் கூறியுள்ளனர். இதுதொடர்பாக ராஜசேகர் அளித்த புகாரின்பேரில் சைபர் கிரைம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in