Published : 15 Jun 2022 06:27 AM
Last Updated : 15 Jun 2022 06:27 AM
கோவில்பட்டி: கோவில்பட்டியில் பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் கிடந்த இளம்பெண் உடலை போலீஸார் நேற்று மீட்டனர்.
கோவில்பட்டியை அடுத்த பாண்டவர்மங்கலம் ஊராட்சி சண்முகசிகாமணி நகர் 2-வது தெருவில்உள்ள ஒரு வீட்டில் தூர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி பொதுமக்கள் மேற்கு காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். கிழக்குகாவல் நிலைய ஆய்வாளர் சுஜித் ஆனந்த், மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் அரிக்கண்ணன் மற்றும் போலீஸார் அந்த வீட்டுக்கு சென்று பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, அழுகிய நிலையில் இளம்பெண் உடல் கிடப்பது தெரியவந்தது.
உடலை கைப்பற்றிய போலீஸார்பிரேதப் பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் சடலமாக கிடந்தவர் தூத்துக்குடி தாளமுத்துநகரைச் சேர்ந்த பொன்னுச்சாமி - லதா தம்பதி மகள் கார்த்திகா (24) என்பது தெரிய வந்தது.
இவருக்கும் சந்திரமோகன் - பெரியதாய் தம்பதி மகன் தங்கராஜ் என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் கடந்த சில மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கோவில்பட்டியில் வசித்து வந்துள்ளனர்.
குழந்தைகள் இருவரையும் கோவில்பட்டி சாய் சிட்டி நகரில் வசித்து வரும் தங்கராஜின் பெற்றோர் வளர்த்து வருகின்றனர்.
இந்நிலையில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் கார்த்திகாவை தங்கராஜ் தாக்கி கொலை செய்து விட்டு, வீட்டை பூட்டிவிட்டு சென்றிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். தங்கராஜை போலீஸார் தேடி வருகின்றனர்.
சாலை மறியல்
இதற்கிடையே கார்த்திகாவை தங்கராஜ் கொலை செய்து விட்டதாகவும், அவரை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் கார்த்திகாவின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் காவல் துணைக் கண்காணிப்பாளர் (பொறுப்பு) சங்கர்தலைமையில் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து சுமார் 45 நிமிடங்களுக்கு பிறகு போராட்டம் கைவிடப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT