Published : 15 Jun 2022 06:16 AM
Last Updated : 15 Jun 2022 06:16 AM
வேலூர்: வேலூர் அருகே சாலையோரம் நிறுத்தியிருந்த டிப்பர் லாரியை திருடிய வழக்கில் மும்பை சிறையில் இருந்தபோது ஏற்பட்ட பழக்கத்தால் ஜாமீனில் வெளியே வந்த ஒடிஷா மற்றும் கன்னியாகுமரியைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் 700 கி.மீ தொலை தேசிய நெடுஞ்சாலை மற்றும் 500-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, குற்றவாளிகளை கைது செய்த தனிப்படையினரை காவல் கண் காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் பாராட்டினார்.
வேலூர் சத்துவாச்சாரி அடுத்த பிள்ளையார்குப்பம் பகுதியில் சாலையோரத்தில் நிறுத்தி வைக் கப்பட்டிருந்த டிப்பர் லாரியை கடந்த மாதம் 17-ம் தேதி இரவு மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இது தொடர்பாக சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் ராணிப்பேட்டையைச் சேர்ந்த லாரி உரிமையாளர் நித்யானந்தம் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் மேற்பார்வையில் வேலூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திருநாவுக்கரசு தலைமையிலான தனிப்படையினர் விசாரணை நடத்தினர்.
இதில், திருடுபோன டிப்பர் லாரி குறித்து தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில், காரில் வந்த 2 பேர் லாரியை திருடிச் செல்வது தெரியவந்தது. அந்த கார் மற்றும் லாரி குறித்து வாலாஜா சுங்கச்சாவடியில் ஆய்வு செய்தனர். அப்போது, வேலூரில் இருந்து புறப்பட்ட அவர்கள் வாலாஜா, ஸ்ரீபெரும்புதூர், தாம்பரம், செங்கல்பட்டு, உளுந்தூர்பேட்டை, விருதாச்சலம், காரைக்கால், நாகப்பட்டிணம் வரை சென்றது தெரியவந்தது. சுமார் 700 கி.மீ தொலைவுக்கு பயணித்துள்ளனர்.
அந்த கார் மற்றும் லாரியின் விவரங்களை 500-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களின் காட்சிப்பதிவுகளை ஆய்வு செய்து உறுதி செய்தனர்.
இதையடுத்து, சைபர் கிரைம் பிரிவு உதவியுடன் மர்ம நபர்களின் செல்போன் எண் குறித்தும் ஆய்வு செய்ததில் ஒருவரின் எண்ணை உறுதி செய்தனர். அவர் ஒடிஷா மாநிலத்தைச் சேர்ந்த மனோஜ் திர்கி (36) என்பது தெரியவந்தது. தொடர் விசாரணையில், மற்றொருவர் கன்னியாகுமரியைச் சேர்ந்த மணிகண்டன் (52) என்பது தெரியவந்தது. ஓசூரில் பதுங்கி இருந்த இருவரையும் தனிப்படை காவலர்கள் நேற்று முன்தினம் கைது செய்தனர். நித்யானந்தத்தின் டிப்பர் லாரியை நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கு ரூ.2.50 லட்சத்துக்கு விற்றது விசாரணையில் தெரிய வந்தது. அந்த டிப்பர் லாரியையும் தனிப்படையினர் மீட்டனர்.
மும்பை சிறை நட்பு
மணிகண்டன் மும்பையில் சில மாதங்களுக்கு முன்பு வேலைக்கு சென்றபோது குற்ற வழக்கு ஒன்றில் கைதாகி மும்பை சிறையில் அடைக்கப்பட்டார். அதே சிறையில் அடைக்கப்பட்டிருந்த கார் திருட்டு வழக்கு குற்றவாளியான மனோஜ் திர்கியுடன் மணிகண்டனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இருவரும் கடந்த மாதம் ஜாமீனில் வெளி வந்த நிலையில் மும்பையில் இருந்து ஒரு காரை திருடிக்கொண்டு பெங்களூரு வழியாக வேலூர் வந்துள்ளனர். அப்போது, செலவுக்கு பணம் வேண்டும் என்பதால் சாலையோரம் நிறுத்தியிருந்த லாரியை திருடிச் சென்றதுடன் ஆற்காடு அருகே லாரியின் ஜி.பி.எஸ் கருவியை அகற்றிவிட்டு நம்பர் பிளேட்டையும் மாற்றியுள்ளனர்.
கர்நாடக மாநிலத்தில் பாஸ்டேக் ஸ்டிக்கரை எந்த ஆவணங்கள் இல்லாமல் வாங்க முடியும் என்பதால் முன்கூட்டியே தமிழக பதிவெண் கொண்ட வாகன நம்பருக்கு அவர்கள் பாஸ்டேக் ஸ்டிக்கர் வாங்கியுள்ளனர்.
அந்த பாஸ்டேக் எண்ணை லாரியில் ஒட்டிக்கொண்டு காரைக்கால் வரை சென்று பின்னர் நாமக்கல்லில் விற்றுள்ளனர். இதில், சுங்கச்சாவடிகளில் பதிவான பாஸ்டேக் எண்ணை வைத்தே காவல் துறை யினர் குற்றவாளிகளை கைது செய்துள்ளனர்.
தொடர் விசாரணையில் லாரியை திருடும்போது பயன்படுத்திய காரை கொல்கத்தாவில் விற்றுவிட்டு வேறு ஒரு காரை மீண்டும் திருடிக்கொண்டு தமிழ்நாட்டில் சுற்றியபோது சிக்கியதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த வழக்கில் 700 கி.மீ தொலைவுள்ள தேசிய நெடுஞ்சாலை மற்றும் 500-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களின் காட்சிகளை ஆய்வு செய்து ஒரு மாதத்தில் குற்றவாளிகளை கைது செய்த டிஎஸ்பி திருநாவுக்கரசு தலைமையிலான தனிப்படை யினரை வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் பாராட்டினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT