

அருப்புக்கோட்டை: பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட அருப்புக்கோட்டை செவிலியர் பயிற்சி கல்லூரி தலைவரின் வங்கிக் கணக்குகளை முடக்கவும் அங்கு பயின்ற மாணவ, மாணவிகளை வேறு கல்லூரிகளில் சேர்க்கவும் நடவடிக்கை எடுப்பதாக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
அருப்புக்கோட்டை தெற்குத் தெருவில் உள்ள தனியார் செவிலியர் பயிற்சி கல்லூரியின் தலைவர் தாஸ்வின் ஜான்கிரேஸ் (38) மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், ஆபாச வீடியோவை அனுப்பியதாகவும் எழுந்த புகாரை அடுத்து,அவரை அருப்புக்கோட்டை மகளிர் போலீஸார் கடந்த 11-ம் தேதி கைது செய்தனர்.
இந்நிலையில், இக்கல்லூரியில் பயின்ற மாணவர்கள் 300-க்கும் மேற்பட்டோர் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நேற்று காலை முற்றுகையிட்டனர். தங்கள் கல்வியை தடையின்றித் தொடர நடவடிக்கை எடுக்க கோரினர்.அவர்களிடம் பேசிய பிறகு ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி கூறும்போது, கல்லூரி தலைவரின் வங்கிக் கணக்குகளை முடக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அனைத்து மாணவர்களும் மற்ற கல்லூரிகளில் சேர்ந்து கல்வியைத் தொடர நடவடிக்கை எடுக்கப்படும். செவிலியர் பயிற்சி மாணவர்களுக்கு மாற்றுக் கல்லூரிகளில் இடம் வழங்குவது தொடர்பாக டெல்லியில் உள்ள மத்திய அரசு அதிகாரிகளுடன் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
கல்லூரி மற்றும் விடுதியில் வருவாய்த்துறை அதிகாரிகளை கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தவும் ஆட்சியர் உத்தரவிட்டார். கூட்டத்தில், பெற்றோர், மாதர் மற்றும் மாணவர் சங்க நிர்வாகிகளும் பங்கேற்றனர்.