Published : 13 Jun 2022 06:43 AM
Last Updated : 13 Jun 2022 06:43 AM

பொள்ளாச்சி | வன விலங்கு வேட்டையில் ஈடுபட்ட 5 பேர் கைது: துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி வனச்சரகப் பகுதியில் வேட்டையில் ஈடுபட்ட 5 பேரை வனத்துறையினர் கைது செய்து, அவர்களிடமிருந்து துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை பறிமுதல் செய்தனர்.

ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி கோட்டத்துக்கு உட்பட்ட சேத்துமடை கிழக்கு பிரிவு மங்கரை வனக்காவல் சுற்றுக்கு உட்பட்ட பனப்பள்ளம் பகுதியில், நேற்று அதிகாலை இரண்டு முறை வெடி சத்தம் கேட்டதாக மங்கரை சுற்று வனக்காப்பாளர் ஆனந்தராஜுக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து, வனத்துறையினர் சென்று காண்டூர் கால்வாய் வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், இரட்டை குழல் துப்பாக்கியுடன், பயன்படுத்தப்படாத 5 தோட்டாக்கள் மற்றும் கறி வெட்ட பயன்படுத்தக் கூடிய ஆயுதங்கள் இருந்தன.

அவற்றை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். காரில் வந்தவர்களிடம் விசாரித்ததில் கோவையை சேர்ந்த மோகன்ராம் (44), கிணத்துக்கடவை சேர்ந்த பாலசுப்ரமணியன் (41), சிங்காநல்லூரை சேர்ந்த ராஜ்குமார் (49), தொட்டிபாளையத்தை சேர்ந்த சதீஷ் (40), ஆழியாறு ஜோதி நகரை சேர்ந்த சதீஷ்குமார் (29) என்பது தெரியவந்தது. அவர்கள் மது அருந்திய இடத்தை ஆய்வு செய்ததில், புதருக்குள் இரண்டு பயன்படுத்தப்பட்ட தோட்டாக்கள் இருந்ததை கண்டறிந்தனர்.

இதுதொடர்பாக ஆனைமலை புலிகள் காப்பக வனப் பாதுகாவலர் மற்றும் கள இயக்குநரின் உத்தரவின்பேரில், வனப்பகுதியில் துப்பாக்கியுடன் சுற்றித் திரிந்த 5 பேரும் கைது செய்யப்பட்டனர். வன விலங்குகளை வேட்டையாடி மாமிசத்தை எடுத்துச் செல்ல இருந்ததாக 5 பேரும் ஒப்புக்கொண்டதால், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

பொள்ளாச்சி நடுவர் நீதிமன்றம் எண்.2-ல் ஆஜர்படுத்தப்படுத்தும் நடவடிக்கையில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x