ஸ்ரீவைகுண்டம் அருகே கந்து வட்டி வழக்கில் கைதானவர் வீட்டில் சோதனை - 22 ஆவணங்கள், காசோலைகள் பறிமுதல்

ஸ்ரீவைகுண்டம் அருகே கந்து வட்டி வழக்கில் கைதானவர் வீட்டில் சோதனை - 22 ஆவணங்கள், காசோலைகள் பறிமுதல்
Updated on
1 min read

ஸ்ரீவைகுண்டம் அருகே கெட்டியம்மாள்புரம் பகுதியைச் சேர்ந்தவர் நம்பி (49). இவர், ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் நிலத்தின் ஆவணங்களை அடமானமாக வாங்கிக்கொண்டு அவருக்கு ரூ.2,50,000 கடன் கொடுத்துள்ளார்.

கடன் தொகைக்கு அதிக வட்டி கேட்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸார் கடந்த 9-ம் தேதி நம்பியை கைது செய்தனர்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்பேரில் ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் அன்னராஜ் தலைமையிலான போலீஸார், நம்பியின் வீட்டில் நேற்று முன்தினம் சோதனை செய்தனர்.

அப்போது தொகை நிரப்பப்படாமல் கையெழுத் திட்டிருந்த 6 காசோலைகள் உட்பட 26 காசோலைகள் கொண்ட ஒரு காசோலை புத்தகம், கடன் பெற்றவர்களின் 3 ஏடிஎம் கார்டுகள், அண்ணாமலை என்ற பெயரில் கையெழுத்து, கைரேகை மற்றும் ஸ்டாம்ப் ஒட்டப்பட்ட ஒரு வெற்று பத்திரம், காசோலை மோசடி வழக்கு சம்பந்தமான ஆவணம், நம்பியிடமிருந்து ஒருவர் ரூ.3 லட்சம் கடன் பெற்றதாக எழுதிக்கொடுத்த பத்திரம், தனியார் நிதி நிறுவனத்தில் தங்க நகைகள்அடகு வைக்கப்பட்ட ரசீது நகல், நம்பி தனது வங்கி கணக்கில் ரூ.3,01,000 செலுத்தியதற்கான ரசீது மற்றும் கடன் பெற்ற 2 பேரின் இரு சக்கர வாகனங்களின் ஆர்.சி.புத்தகங்கள் உட்பட 22 ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கந்துவட்டி குறித்து புகார் அளித்தால் உடனடியாக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு கைது செய்யப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார்.

கடன் தொகைக்கு அதிக வட்டி கேட்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸார் கடந்த 9-ம் தேதி நம்பியை கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in