

செங்கல்பட்டு: ஆன்லைன் செல்போன் செயலி மூலம் லஞ்சம் பெற்ற மதுவிலக்கு உதவி ஆய்வாளர் மற்றும் தலைமை காவலரை பணியிடை நீக்கம் செய்து காஞ்சிபுரம் சரக டிஐஜி சத்யபிரியா உத்தரவிட்டுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த ஜல்லிமேடு பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவர் தொடர்ந்து சட்டவிரோதமாக மது விற்பனை செய்து வந்ததால் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அவரது மனைவி மாலா, வீட்டில் தொடர்ந்து மது விற்பனை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. டாஸ்மாக் கடைகளில் இருந்து மதுபாட்டில்களை வாங்கி வந்து சட்டவிரோதமாக வீட்டில் வைத்து விற்பனை செய்து வந்தாக தெரிகிறது.
ஆடியோ வெளியானது
இந்நிலையில், மதுராந்தகம் மதுவிலக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் வாசு மற்றும் தலைமை காவலர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் முருகனின் மனைவியிடம் லஞ்சம் வாங்குவது தொடர்பான ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதில் முருகனின் மனைவி மாலா ரூ.3 ஆயிரம் ஆன்லைனில் செயலி மூலம் அனுப்பி உள்ளதாகக் கூறுகிறார். அதற்கு காவலர் பாலசுப்பிரமணி ரூ.4,000 அனுப்பு இல்லையென்றால் கைது செய்து விடுவோம் என்றும் இனிமேல் மது விற்பனை செய்யக்கூடாது என்றும் பேசும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
டிஐஜி நடவடிக்கை
இதுதொடர்பான புகார் வந்த நிலையில் தொடர்புடைய உதவி ஆய்வாளர் வாசு மற்றும் தலைமை காவலர் பாலசுப்பிரமணியன் ஆகியோரிடம் விசாரணை நடைபெற்றது. அதில் குற்றம் உறுதியானதால் இருவரையும் நேற்று பணியிடை நீக்கம் செய்து காஞ்சிபுரம் சரக டிஐஜி சத்யபிரியா உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.