

சென்னை: விருத்தாசலம் கண்ணகி, முருகேசன் ஆணவக் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான மருதுபாண்டிக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பெண்ணின் தந்தை, ஓய்வுபெற்ற காவல் அதிகாரி உள்ளிட்ட 9 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே குப்பநத்தம் புதுக்காலனி பகுதியை சேர்ந்தவர் சாமிக்கண்ணு மகன் முருகேசன். புதுக்கூரைப்பேட்டையை சேர்ந்த முன்னாள் பஞ்சாயத்து தலைவர் துரைசாமியின் மகள் கண்ணகி. வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த இருவரும் கல்லூரியில் படித்தபோதே காதலித்துள்ளனர். கடந்த 2003 மே 5-ம் தேதி பதிவுத் திருமணம் செய்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறினர். முருகேசனின் உறவினர் வீட்டில் கண்ணகியும், மற்றொரு உறவினர் வீட்டில் முருகேசனும் தங்கியிருந்தனர்.
இருவரையும் தேடிப் பிடித்து சொந்த கிராமத்துக்கு அழைத்து வந்த கண்ணகியின் உறவினர்கள், இருவரது கை, கால்களை கயிற்றால் கட்டி காது மற்றும் மூக்கில் விஷம் ஊற்றி கொடூரமாக கொலை செய்தனர். பின்னர் இருவரது உடல்களையும் தனித்தனியாக எரித்தனர்.
தமிழகத்தையே உலுக்கிய இந்த ஆணவக் கொலை தொடர்பாக முருகேசனின் உறவினர்கள் விருத்தாசலம் போலீஸில் புகார் அளித்தனர். அந்த புகாரை போலீஸார் சரியாக விசாரிக்கவில்லை எனக்கூறி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணை சிபிஐ-க்கு மாற்றப்பட்டது.
அதன்படி, சிபிஐ விசாரணை நடத்தி ஆணவக் கொலை தொடர்பாக கண்ணகியின் தந்தை சி.துரைசாமி (69), அவரது மகன் மருதுபாண்டியன் (50) மற்றும் டி.ரங்கசாமி (46), சி.அய்யாச்சாமி (62), ஜி.கந்தவேல் (55). ஜி.ஜோதி (54), ஜி.வெங்கடேசன் (56). ஆர்.மணி (67), பி.குணசேகரன் ( 60), ஆர்.தனவேல் (50), வி.அஞ்சாப்புலி (48), கே.ராமதாஸ் (53), என்.சின்னதுரை (63), காவல் உதவி ஆய்வாளர் கே.பி.தமிழ்மாறன் (52), காவல் ஆய்வாளர் எம்.செல்லமுத்து (67) ஆகிய 15 பேர் மீது கடந்த 2004-ல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
இந்த வழக்கை விசாரித்த கடலூர் வன்கொடுமைகள் தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றம், கண்ணகியின் சகோதரர் மருதுபாண்டியனுக்கு தூக்கு தண்டனையும், தந்தை துரைசாமி, காவல் ஆய்வாளர் செல்லமுத்து, உதவி ஆய்வாளர் தமிழ்மாறன் உள்ளிட்ட 12 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து கடந்த ஆண்டு செப்.24-ல் தீர்ப்பு அளித்தது. அய்யாச்சாமி, குணசேகரன் இருவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்த தீர்ப்பை எதிர்த்து தண்டனை விதிக்கப்பட்ட 13 பேர் தரப்பிலும், தூக்கு தண்டனையை உறுதி செய்யக் கோரி கீழமை நீதிமன்றம் தரப்பிலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீதான விசாரணை, நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஏ.ஏ.நக்கீரன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. தண்டனை பெற்றவர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் கோபிநாத், எஸ்.பிரபாகரன், வழக்கறிஞர்கள் கே.பாலு, எம்.ஆர்.ஜோதிமணியன், எஸ்.கார்த்திகேயன், வி.இளங்கோவன் ஆகியோரும், முருகேசனின் தந்தை சாமிக்கண்ணு தரப்பில் வழக்கறிஞர்கள் வி.சுரேஷ், சத்தியசந்திரன் ஆகியோரும், சிபிஐ தரப்பில் வழக்கறிஞர் சீனிவாசனும் ஆஜராகி வாதிட்டனர்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், காணொலி வாயிலாக நேற்று பிறப்பித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான மருதுபாண்டியனுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை, ஆயுள் தண்டனையாக குறைக்கப்படுகிறது. கண்ணகியின் தந்தை துரைசாமி, டிஎஸ்பியாக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள செல்லமுத்து, கந்தவேல், ஜோதி, வெங்கடேசன், மணி, தனவேல், அஞ்சாப்புலி, ராமதாஸ் ஆகிய 9 பேருக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்கிறோம்.
உதவி ஆய்வாளர் தமிழ்மாறனுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை 2 ஆண்டு சிறை தண்டனையாக குறைக்கிறோம். ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ரங்கசாமி, சின்னதுரை ஆகியோரை வழக்கில் இருந்து விடுதலை செய்கிறோம். இவ்வாறு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.
கடமையை செய்யத் தவறிய காவல் அதிகாரிக்கும் மற்றவர்களுக்கும் ஆயுள் தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்திருப்பதை வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பாக பார்க்கிறோம் என முருகேசன் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.