

சென்னை: உயர் நீதிமன்றத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்டுகைதான நபரின் ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் வேலை வாங்கித் தருவதாகக்கூறி பலரிடம் பல லட்சம் ரூபாய் வசூலித்து மோசடியில் ஈடுபட்டதாக நாகேந்திரகுமார், மணிகண்டன், குமார் உள்ளிட்ட 7 பேரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர். இவர்களில் மணிகண்டன் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு முதன்மை அமர்வுநீதிபதி எஸ்.அல்லி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை பெருநகர தலைமை குற்றவியல் அரசு வழக்கறிஞர் ஜி.தேவராஜ் ஆஜராகி, மனுதாரர் நீதித்துறை என்ற பெயரில் வாட்ஸ்-ஆப் குரூப் உருவாக்கி அதன் மூலம் உயர் நீதிமன்றத்தில் வேலை வாங்கித் தருவதாகக்கூறி 9 பேரிடம் தலா ரூ.6 லட்சம் வசூலித்துள்ளார்.
அதில் ரூ.18 லட்சத்தை மனுதாரர்மோசடி செய்துள்ளார். இவர்கள்போலி உயர் நீதிமன்ற முத்திரைகளையும் பயன்படுத்தியுள்ளனர். மனுதாரரை காவலில் எடுத்து விசாரித்து வசூலித்த பணத்தை திரும்பப் பெற வேண்டியுள்ளது. எனவே அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது, என ஆட்சேபம் தெரிவித்தார். அதையடுத்து நீதிபதி எஸ்.அல்லி, கைதாகி சிறையில் உள்ள மணிகண்டனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவி்ட்டுள்ளார்.