

சென்னை: கோயில் திருவிழாவின் போது ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக இளைஞரை கொலை செய்யும் திட்டத்துடன் பதுங்கித் தாக்கிய 4 பேரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
ஓட்டேரி, எஸ்விஎம் நகரைச் சேர்ந்தவர் விக்னேஷ்(22). இவர்நேற்று முன்தினம் மதியம் வீட்டினருகே உள்ள ஓட்டேரி, ஆதியப்பன் முதல் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு மறைந்திருந்த 6 பேர் கும்பல் விக்னேஷை வழிமறித்து கத்தியால் தாக்கிவிட்டு தப்பியது.
தகவல் அறிந்த தலைமைச் செயலக குடியிருப்பு காவல் நிலைய போலீஸார் சம்பவ இடம் விரைந்தனர். பலத்த காயத்துடன் இருந்த விக்னேஷை மீட்டுஅருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். இதற்கிடையில், தலைமறைவான கும்பலை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படையினர் விக்னேஷை கொலை செய்யும் திட்டத்துடன் தாக்கியதாக ஓட்டேரியைச் சேர்ந்த அருண்ராஜ் (23), தமிழரசன் (21), சந்தோஷ்குமார் (27), பட்டாளம் செல்வம் (26) ஆகிய 4 பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மேலும் இருவரை தேடி வருகின்றனர்.
விசாரணையில், அருண்ராஜ் தரப்பினருக்கும், விக்னேஷுக்கும் கடந்த மாதம் ஓட்டேரியில் நடந்த திருவிழாவின்போது, தகராறு ஏற்பட்டதும், இந்த முன்விரோதம் காரணமாக அருண்ராஜ் மற்றும் 5 நபர்கள் சேர்ந்து, விக்னேஷை கத்தியால் தாக்கி கொலை செய்ய முயன்றதும் தெரியவந்ததாக போலீஸார் தெரிவித்தனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.