Published : 08 Jun 2022 08:46 PM
Last Updated : 08 Jun 2022 08:46 PM
லக்னோ: 'பப்ஜி' விளையாடுவதற்கு தடையாக இருந்த தனது தாயை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற வளரிளம் சிறுவன் ஒருவரை உத்தரப் பிரதேச போலீசார் கைது செய்தனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள யமுனாபுரம் காலனியில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. கொலை செய்யப்பட்ட பெண் தனது 16 வயது மகன் மற்றும் 9 வயது மகளுடன் யமுனாபுரத்தில் வசித்து வந்துள்ளார். ராணுவத்தில் இளநிலை அதிகாரியான அவரது கணவர் மேற்கு வங்கத்தில் பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில், பப்ஜி விளையாட்டுக்கு அடிமையான 16 வயது மகனை அவரது தாய் "பப்ஜி விளையாடக் கூடாது” எனத் தடுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த சிறுவன் தனது தாயை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார்.
இதுகுறித்து கூடுதல் துணை ஆணையர் காசிம் அபிடி கூறும்போது "இந்தச் சம்பவம் பிஜிஐ காவல் சரகத்திற்கு உட்பட்ட யமுனாபுரம் காலனியில் நடந்துள்ளது. அந்த 16 வயது சிறுவன் "பப்ஜி" என்னும் ஆன்லைன் விளையாட்டிற்கு அடிமையாக இருந்துள்ளார். சிறுவனின் தாய் அவனை "பப்ஜி விளையாடக் கூடாது” என்று தடை விதித்ததால், சிறுவன் அவரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளார். இதற்காக தனது தந்தையின் லைசன்ஸ்டு தூப்பாக்கியைப் பயன்படுத்தியுள்ளார்.
இந்தச் சம்பவம் சனிக்கிழமை இரவில் நடந்துள்ளது. தாயைக் கொன்றதும் அவரின் உடலை ஓர் அறையில் வைத்துப் பூட்டிய சிறுவன் தனது தங்கையுடன் பக்கத்து அறையில் இருந்துள்ளார். உடல் அழுகி நாற்றம் வெளியே வராமல் இருக்க ரூம் ஸ்ப்ரேவை பயன்படுத்தியுள்ளார்.
நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலையில் உடல் அழுகி நாற்றம் வந்த நிலையில், சம்பவம் குறித்து சிறுவன் தனது தந்தைக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதிர்ச்சியடைந்த தந்தை பக்கத்து வீட்டாருக்கு தகவல் கொடுத்துள்ளார். அவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
முதலில் சம்பவத்தை மறைத்து வேறு கதை சொல்ல முயன்ற சிறுவன், கடைசியில் உண்மையை ஒப்புக்கொண்டார்" என்று தெரிவித்தார்.
இறந்த பெண்ணின் உடலைக் கைப்பற்றி பிரதே பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், சிறுவனை கைது செய்து, கொலைக்கு பயன்படுத்திய துப்பாக்கியையும் பறிமுதல் செயது மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT