Published : 08 Jun 2022 06:02 AM
Last Updated : 08 Jun 2022 06:02 AM
கரூர்: ஃப்ரீபயர் விளையாட்டில் பணம் இழந்த கரூர் இளைஞர், வாட்ஸ்அப்பில் வேதனையுடன் விழிப்புணர்வு ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
கரூர் தாந்தோணிமலை சிவசக்திநகர் 5-வது குறுக்குத் தெருவை சேர்ந்தவர் சத்யபாமா. தையல் தொழில் செய்கிறார். கணவர் பிரிந்து சென்றுவிட்டதால், தனது மகன்சஞ்சய்(23) மற்றும் மகளுடன் வசித்து வந்தார். தனியார் கல்லூரியில் கேட்டரிங் படிப்பில் சேர்ந்த சஞ்சய், படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டார். அவ்வப்போது, திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு கேட்டரிங் பணிக்கு சென்றஇவர், கடந்த சில நாட்களாக கொசுவலை நிறுவனத்தில் வேலைக்கு சென்று வந்துள்ளார்.
தாயின் கண்டிப்பை மீறி பெரும்பாலான நேரம் செல்போனில் ஃப்ரீபயர் என்ற ஆன்லைன் விளையாட்டு விளையாடி வந்த இவர், ரூ.1 லட்சம் வரைஅதில் இழந்துள்ளார்.
இதற்கிடையே, இவரது யூசர் ஐடி, பாஸ்வேர்டை யாரோ ஹேக் செய்து விளையாடியதில், சஞ்சய் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.30,000 வரை பறிபோனது. இதனால், கடும்மனஉளைச்சலில் இருந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சஞ்சய் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். செல்போனில் விளையாடியதை, தாய் கண்டித்ததால் விரக்தியடைந்து தற்கொலை செய்து கொண்டதாக தாந்தோணிமலை போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதற்கிடையே, தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு சஞ்சய் தனது வாட்ஸ்அப்பில் வைத்திருந்த ஸ்டேட்டஸை அவரது நண்பர்கள் பார்த்துள்ளனர்.
அதில், ‘ஃப்ரீபயர் விளையாடாதீர்கள். எனது ரூ.1 லட்சம் பறிபோய்விட்டது. இந்த விளையாட்டு நம்மை அடிமையாக்கிவிடுவதுடன், நேரமும் விரயம் ஆகிறது. இதில் முறைகேடு செய்து சம்பாதிக்கின்றனர். இந்த விளையாட்டை தடை செய்தால்தான் என்னைப் போன்றவர்கள் திருந்துவார்கள். எனது யூசர் ஐடி, பாஸ்வேர்டை எனக்கு தெரிந்தவர்தான் எடுத்து துரோகம் செய்துள்ளார். என்னைப்போல யாரும் ஏமாற வேண்டாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT