Published : 08 Jun 2022 07:34 AM
Last Updated : 08 Jun 2022 07:34 AM
காஞ்சிபுரம்: அண்டை வீட்டாரின் வளர்ப்பு நாய் அடிக்கடி குரைக்கும் சத்தம் இடையூறாக இருந்ததை தட்டிக்கேட்டதால் ஏற்பட்ட தகறாரில் காஞ்சிபுரத்தில் பிரபல பச்சை குத்தும் நிபுணர் (டாட்டூ) சரண்சிங் குத்திக் கொல்லப்பட்டார்.
இதுதொடர்பாக அண்டை வீட்டைச் சேர்ந்த அம்மா, 2 மகன்கள் என 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட ராஜகோபால் பூபதி தெருவைச் சேர்ந்தவர் அறிவழகன். இவருக்கு அமுதா என்ற மனைவியும், சவுமியா என்ற மகளும், சரண்சிங் என்ற மகனும் உள்ளனர்.
சரண்சிங் காஞ்சிபுரம் கீரை மண்டபம் அருகே டாட்டு (உடலில் பச்சை குத்துதல்) கடை நடத்தி வருகிறார். மேலும் வணிகர் வீதியில் உணவகமும் நடத்தி வருகிறார்.
இவர் வீட்டுக்கு அருகே வசிக்கும் விஷ்ணு என்பவரின் குடும்பத்துக்கும் சரண்சிங் குடும்பத்துக்கும் இடையே கடந்த 3 தினங்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் விஷ்ணு தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து அறிவழகன் மற்றும் அமுதாவை தாக்கியுள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த சரண்சிங், தனது பெற்றோரை தாக்கிய விஷ்ணுவை தட்டிக்கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆவேசமடைந்த விஷ்ணு, அவரது தாயார் சித்ரா, தம்பி சிவா மற்றும் 3 நண்பர்கள் சேர்ந்து சரண்சிங்கையும் அவரது குடும்பத்தினரையும் கடுமையாக தாக்கியதாக தெரிகிறது.
மேலும் கூர்மையான ஆயுதங்களைக் கொண்டு குத்தியுள்ளனர். இதில் அவர்கள் படுகாயமடைந்தனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் சரண்சிங் உயிரிழந்தார்.
இதுகுறித்த புகாரின்பேரில் சிவகாஞ்சி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். முதல்கட்ட விசாரணையில் விஷ்ணுவின் வளர்ப்பு நாய் குரைத்தபடியே இருந்ததால் அதன் சத்தம் தங்களுக்கு இடையூறாக இருப்பதாக சரண்சிங் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்தே வாக்குவாதம் ஏற்பட்டு அது பிரச்சினையாக மாறியது தெரியவந்துள்ளது.
இக்கொலை தொடர்பாக விஷ்ணு, அவரது தாயார் சித்ரா, தம்பி சிவா ஆகிய 3 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT