தருமபுரி | சுவரை துளையிட்டு வங்கியில் கொள்ளை முயற்சி - பல நூறு பவுன் நகை, பணம் தப்பியது

தருமபுரி | சுவரை துளையிட்டு வங்கியில் கொள்ளை முயற்சி - பல நூறு பவுன் நகை, பணம் தப்பியது
Updated on
1 min read

தருமபுரி: தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் ஏ.பள்ளிப்பட்டியில் தனியார் கட்டிடம் ஒன்றின் முதல் தளத்தில் தமிழ்நாடு கிராம வங்கி செயல்பட்டு வருகிறது. வங்கியின் மேலாளராக சுரேஷ் என்பவர் பணியாற்றி வருகிறார். கடந்த 4-ம் தேதி மாலை பணி முடிந்ததும் வங்கி வழக்கம்போல் பூட்டப்பட்டுள்ளது.

ஞாயிறு விடுமுறை என்பதால் 6-ம் தேதி காலை வங்கி திறக்கப்பட்டுள்ளது. பணியாளர்களும் அன்றாட அலுவலில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், பிற்பகலில் வங்கியின் லாக்கர் அறையை திறந்தபோது அந்த அறையின் சுவர் துளையிடப்பட்டிருந்தது. ஆள் உள்ளே நுழையும் அளவில் வட்டமாக சுவர் துளையிடப்பட்டிருந்தது. ஆனால், வங்கி லாக்கர் திறக்கப்பட வில்லை. வங்கியில் இருந்த நகை, பணம் எதுவும் திருடப்படவில்லை என ஆய்வில் தெரிய வந்தது.

இச்சம்பவம் தொடர்பாக வங்கி மேலாளர் ஏ.பள்ளிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் மோப்ப நாய் மூலமும், கைரேகைகளை சேகரித்தும், சிசிடிவி காட்சிகளைக் கொண்டும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளை முயற்சி நடந்த வங்கியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் நேற்று நேரில் பார்வையிட்டார். உடன் அரூர் டிஎஸ்பி பெநாசீர் பாத்திமா உள்ளிட்ட போலீஸாரும் இருந்தனர்.

முதல் நாள் இரவில் லாக்கர் அறையில் துளை ஏற்படுத்திய கும்பல், அட்டைகளைக் கொண்டு சுவரை அடைத்துச் சென்றுள்ளனர். மறுநாள் இரவில் கொள்ளையடிக்க மர்ம கும்பல் திட்டமிட்டுள்ளது.

அதற்குள்ளாக வங்கிப் பணியாளர்கள் லாக்கர் அறையை திறந்து பார்த்ததால் கொள்ளை முயற்சி திட்டம் தெரிய வந்தது என்பன உள்ளிட்ட தகவல்கள் போலீஸார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மர்ம கும்பல் திட்டமிட்டபடி கொள்ளை நடந்திருந்தால், லாக்கரில் இருந்த பல நூறு பவுன் நகை, ரூ.20 லட்சம் பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in