

சென்னை: சென்னை, பெரவள்ளூர், வெற்றி நகரைச் சேர்ந்தவர் மணிவாசகம் (41). இவர், நேற்று முன்தினம் நள்ளிரவு காற்றுக்காக வீட்டின் கதவை திறந்து வைத்துவிட்டு தூங்கிக் கொண்டிருந்தார்.
அதிகாலை 2 மணியளவில் ஒருவர் வீடு புகுந்து மணிவாசகத்தின் செல்போனை திருடிக் கொண்டு தப்பினார்.
இதேபோல் அந்த பகுதியைச் சேர்ந்த 5 பேரின் செல்போன்கள் அடுத்தடுத்து திருடப்பட்டன.
பாதிக்கப்பட்டவர்கள் இதுகுறித்து திரு.வி.க.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் காவல் ஆய்வாளர் சூரியலிங்கம், உதவி ஆய்வாளர்கள் ஆறுமுகம், லோகநாதன், தலைமைக் காவலர் பிரபு ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது.
போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில் வீடு புகுந்து செல்போன் திருடியது பெரவள்ளூரை சேர்ந்த விஜய் (23) என்பது தெரியவந்தது. அவரை போலீஸார் கைதுசெய்தனர். விஜய் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளதாக போலீஸார் கூறினர்.