Published : 08 Jun 2022 07:32 AM
Last Updated : 08 Jun 2022 07:32 AM
செங்கல்பட்டு: செங்கல்பட்டு நகராட்சி பகுதியில் நடைபாதை கடைகளை நேற்று அகற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் தீக்குளிக்க முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே பல ஆண்டுகளாக காய்கறி வியாபாரம் செய்துவரும் நடைபாதை கடைகளை கடந்த மாதம் 13-ம் தேதி நகராட்சி ஆணையர் தலைமையில் காவல்துறை உதவியோடு அகற்றினர். அதே இடத்தில் அடுத்த ஒரு வாரத்தில் மீண்டும் கடைகள் அமைக்கப்பட்டு வியாபாரம் நடந்து வந்தது.
அகற்றப்பட்ட வியாபாரிகளுக்கு பழைய விருந்தினர் மாளிகையை இடித்து உழவர் சந்தை கடைகளோடு இணைத்து கழிப்பறை, குடிநீர் வசதி, லாரிகள் உள்ளே சென்று காய்கறி லோடுகளை இறக்குவதற்கு ஏதுவாக அனைத்து வசதிகளையும் நகராட்சி சார்பில் செய்து கொடுத்து நடைபாதை வியாபாரிகள் அங்கு செல்ல வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.
இதனை ஏற்காத நடைபாதை வியாபாரிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். தொடர்ந்து நகராட்சி ஆணையருடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில் இன்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நகராட்சி ஆணையர் மல்லிகா தலைமையில் செங்கல்பட்டு வட்டாட்சியர் வாசுதேவன், நகராட்சி நகரமைப்பு ஆய்வாளர்கள் கணேசமூர்த்தி, செந்தில்குமார் செழியன், செங்கல்பட்டு காவல் ஆய்வாளர் வடிவேல் முருகன் ஆகியோர் முன்னிலையில் நேற்று 44 நடைபாதை கடைகளை இடித்து அகற்றும் பணி நடைபெற்றது.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்து 2 பெண்கள் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தனர். இதையடுத்து தயார் நிலையில் இருந்த தீயணைப்பு துறையினர் அவர்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து அவர்களை மீட்டனர். தொடர்ந்து 4 பெண்கள் உட்பட 18 பேரை போலீஸார் கைது செய்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT