இளைஞர் தற்கொலை; ஆன்லைன் ரம்மி காரணமா?- வாட்ஸ்அப் ஸ்டேடஸால் பரபரப்பு

இளைஞர் தற்கொலை; ஆன்லைன் ரம்மி காரணமா?- வாட்ஸ்அப் ஸ்டேடஸால் பரபரப்பு
Updated on
1 min read

கரூர்: கரூரில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸால் ஆன்லைன் ரம்மி காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கரூர் தாந்தோணிமலை சிவசக்தி நகர் 5வது குறுக்குத்தெருவைச் சேர்ந்தவர் சத்யபாமா. இவர் மகன் சஞ்சய் (23). இவர் தந்தை ராஜலிங்கம் தாயை பிரிந்ததால் சஞ்சய் தாயுடன் வசித்து வந்தார். கேட்டரிங் படித்துள்ளார். தாய் மேற்படிப்பு படிக்க வைக்காததால் மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது. வேலை இல்லாததால் கிடைக்கும் வேலைக்குச் சென்று வந்ததாகவும், அதற்கும் சரிவர செல்லாததால் அவரது தாய் அடிக்கடி திட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் விரக்தியடைந்த சஞ்சய் நேற்று (ஜூன் 6ம் தேதி) மாலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்த தாந்தோணிமலை போலீஸார் வழக்குப்பதிவு செய்து சஞ்சய் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சஞ்சய் ஆன்லைன் ரம்மி விளையாடி வந்ததாகவும், ஒரு சில முறை வெற்றி பெற்றதால் அதற்கு அடிமையானதகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் சஞ்சய் ஐடியை யாரோ ஹேக்செய்து ஆன்லைன் ரம்மி விளையாடி தோற்றதால் அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.30,000 வரை எடுக்கப்பட்டதாகவும் இதனால் மன உளைச்சலில் இருந்த சஞ்சய் "கேம்முக்கு யாரும் அடிக்ட் ஆகாதாதீங்க என்ன மாதிரி ஏமாறதீங்க. எதாவது சாதிங்க" என வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இதனால், ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு அடிமையாக இருந்த சஞ்சயின் ஐடியை யாரோ ஹேக் செய்து விளையாடி அவர் வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்ட விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகக் கூறி அவர் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸை அனைவரும் பகிர்ந்து வருவதால் அவர் வசிக்கும் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அவர் உடல் பிரேத பரிசோதனைக்கு வைக்கப்பட்டுள்ள கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிரேதப் பரிசோதனை அறை முன் உறவினர், நண்பர்கள், அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் திரண்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in